Rock Fort Times
Online News

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் ஒரு ஏக்கர் நிலத்தில் 2.50 கோடி லிட்டர் கொள்ளளவு கொண்ட பண்ணைக் குட்டை… * கழிவுநீரை மறுசுழற்சி செய்து நன்னீராக்கி சாதனை..!

பெரம்பலூர் மாவட்டத்தின் தவிர்க்க முடியாத கல்வி அடையாளங்களில் ஒன்று தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமம். இக்குழுமத்திற்கு சொந்தமாக பெரம்பலூர், சிறுவாச்சூர் திருச்சி சமயபுரம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் பல்கலைக்கழகங்களும், மருத்துவக்கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. இங்கு ஒட்டுமொத்தமாக 40 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பெரம்பலூர் – துறையூர் சாலையில் இயங்கிவரும் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வளாகத்தில் கழிவுநீரை சுத்திகரித்து மறு பயன்பாட்டிற்கும், இயற்கை விவசாயத்திற்கும் பயன்படும் வகையில் ஒரு ஏக்கர் பரப்பளவில் பண்ணைக்குட்டையை நிறுவி கவனம் ஈர்த்துள்ளது. இதுகுறித்து தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேளாண்மைக் கல்லூரி பேராசிரியர்கள் நம்மிடம் பேசினர். அப்போது தெரிவித்ததாவது.,

பெரம்பலூரில் இயங்கிவரும் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வளாகத்தில் மட்டும் சுமார் 15 ஆயிரம் மாணவர்கள் ஹாஸ்டலில் தங்கி பயின்று வருகின்றனர். இவர்கள் குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும் பயன்படுத்திய கழிவு நீர் வீணாக நிலத்தில் கலந்து வந்தது. இதை சுத்திகரித்து மறுசுழற்சி முறையில் விவசாயத்திற்கு பயன்படுத்தலாம் என பல்கலைக்கழக வேந்தர் அ.சீனிவாசன் அறிவுறுத்தியதன் விளைவாக கொண்டு வரப்பட்டதே இந்த பண்ணைக்குட்டை. இதன்மூலம் பல்கலைக்கழக வளாகத்தில் பல இடங்களில் வீணாகும் கழிவு நீரை “சீவேஜ் சிஸ்டம்” மூலம் ப்ராசஸ் செய்து குழாய் மூலம் நேரடியாக நாம் உருவாக்கியுள்ள இந்த குட்டைக்கு வரும்படி செய்துள்ளோம். இதன்மூலம் வீணாகும் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு இந்த குட்டையில் சேமிக்கப்படும்.
சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் 11 அடி ஆழத்தில் இந்த பண்ணை குட்டை உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 2.50 கோடி லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும். இப்படி சேமிக்கப்படும் தண்ணீர் எங்கள் பல்கலைக்கழக வளாகத்தில் வேளாண் கல்லூரி சார்பில் நிர்வகிக்கப்படும் 80 ஏக்கர் விவசாய நிலத்திற்கு பயன்படும். கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு பண்ணைக்குட்டையில் சேமிக்கப்படும் தண்ணீரில் ஹைட்ரஜன் கன்டன்ட் அதிகமாக இருப்பதால் இதில் மீன் வளர்க்கப்படும் போது,அந்த மீன் கழிவுகள் கலந்த தண்ணீரை விவசாய நிலத்திற்கு பயன்படுத்தினால் இயற்கை விவசாய முறையில் பயிரப்படும் பல்வேறு வகையான பயிர்களில் அதிகபடியான சாகுபடி கிடைக்கும். மேலும், எங்கள் வேளாண் கல்லூரி மணவர்களும் ஒருங்கிணைந்த பண்ணை முறையில் எப்படி நேர்த்தியாக இயற்கை விவசாயம் செய்ய முடியும் என்பதையும் வீணாகும் கழிவுநீரை எப்படி மறுசுழற்சி முறையில் விவசாயத்திற்கு பயன்படுத்தலாம் என்பதையும் நேரடியாக பார்த்து தெரிந்து கொள்ளும் விதமாகவும் இந்த பண்ணைக்குட்டை இருக்கும் என்றார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்