உங்களை தோற்கடிக்க குறி வைக்கப்பட்டிருப்பதாக மு.க.ஸ்டாலினிடம் அன்றே கூறினேன்’…* தேர்தல் ஆணையருக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் பேச்சு!
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகவும், அவர் பதவி விலகக் கோரியும் நாடு முழுவதும் போராட்டம் வலுவடைந்து வருகிறது. இந்த நிலையில், ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று(15-10-2026) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தவெக சார்பில் அமைச்சர் ராஜ்மோகன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சிபிஐ மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், விசிக தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தியா கூட்டணியிலிருந்து திமுக விலகிய பிறகு, அந்த கூட்டணியின் போராட்டத்தில் தவெக முதல்முறையாக பங்கேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
திருமாவளவன்
ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசுகையில், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்) மூலம் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டு உள்ளனர். கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டபோது, சுமார் ஒரு லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகவும், இந்தச் சதி குறித்துத் தேர்தலுக்கு முன்பே ஸ்டாலினிடம் நேரில் எச்சரித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அமைச்சர் ராஜ்மோகன்
ஆர்ப்பாட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், எஸ்.ஐ.ஆரை முதலில் இருந்தே த.வெ.க.எதிர்த்து வருகிறது. எஸ்.ஐ.ஆர் நடந்தபோது ஜனநாயகத்துக்கு விரோதம் என்று கூறினோம். இந்தியா மீது எஸ்.ஐ.ஆர் திணிக்கப்பட்டுள்ளது என்றார்.

Comments are closed.