குதிரை பேரத்தில் ஈடுபடும் த.வெ.க. அமைச்சர் செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழக ஆளுநரிடம் அதிமுக புகார்…!
அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் உள்பட 6 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்து தவெகவில் இணைந்துள்ளனர். இதில் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகிய இருவரும் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுளளனர். இந்த சூழலில், அதிமுகவிலிருந்து மேலும் 15 பேர் தவெகவுக்கு வரத் தயாராக இருப்பதாக தவெக அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் தெரிவித்தது சர்ச்சையாகியுள்ளது. இந்த நிலையில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்த அதிமுக முக்கிய நிர்வாகிகள், அமைச்சர் செங்கோட்டையனுக்கு எதிராக புகார் அளித்தனர். இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறுகையில்,
ஏற்கெனவே அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 6 பேரை குதிரை பேரம் மூலம் வாங்கி, அவர்களை தவெக ராஜிநாமா செய்ய வைத்துள்ளது. இதன்மூலம் இடைத்தேர்தல் கொண்டு வந்து அவர்களை மீண்டும் போட்டியிட வைத்து, தங்கள் ஆட்சியைத் தக்கவைக்க முயற்சிக்கிறது. தற்போது தவெகவின் மூத்த அமைச்சர் செங்கோட்டையன், மேலும் 15 பேர் தவெக வரவுள்ளதாக மேடையில் பேசியுள்ளார். அப்படியென்றால், தமிழ்நாட்டில் தொடர்ந்து குதிரை பேரம் நடைபெறுகிறது. அதற்கு அமைச்சர் செங்கோட்டையன் பேசியது சான்றாக உள்ளது. குதிரை பேரம் நடத்தும் தவெகவினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.

Comments are closed.