Rock Fort Times
Online News

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள்: பணியில் இருக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் 99,000 பேர் தோல்வி…!

ஆசிரியர் தகுதித் தேர்வில் ‘தாள் 2’ எழுதிய பட்டதாரி ஆசிரியர்கள் 1,60,929 பேரில், 99,000 பேர் தோல்வியைத் தழுவியுள்ளனர். அதாவது, இந்த தேர்வில் பணியில் இருக்கும் 38.3 விழுக்காடு ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் ஒன்று தேர்வு கடந்த ஜூலை 4ம் தேதி நடைபெற்றது. இடைநிலை ஆசிரியர் பணிக்கான தாள் ஒன்றுக்கான தேர்வை 222 மையங்களில் 61,386 தேர்வர்கள் எழுத அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 59,535 பேர் தேர்வு எழுதினர்.
தொடர்ந்து, பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தாள் இரண்டு தேர்வு, கடந்த ஜூலை 5ஆம் தேதி 613 மையங்களில் நடைபெற்றது. இந்தத் தேர்வை எழுத 1,67,743 பேர் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 1,60,929 பேர் தேர்வு எழுதினர். இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 2025 செப்டம்பர் 1 முதல் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது. பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில், பொதுப் பிரிவினர் 150க்கு 90 மதிப்பெண்களும், பிசி, எம்.பி.சி., பி.சி.எம் பிரிவில் உள்ளவர்கள் 150க்கு 75 மதிப்பெண்களும் பெற வேண்டும். அதேபோல், எஸ்.சி., எஸ்.டி. மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர் 150க்கு 60 மதிப்பெண்களும் பெற்றால் தகுதி என்று நிர்ணயிக்கப்பட்டது.
இந்த தேர்வு முடிவுகளில் இடைநிலை ஆசிரியர் தேர்வு எழுதிய 59,535 ஆசிரியர்களில் 47,682 பேர், அதாவது 80.8 சதவீதம் பேர் தகுதி பெற்றுள்ளனர். தொடர்ந்து, பட்டதாரி ஆசிரியர் தேர்வு எழுதிய 1,60,929 ஆசிரியர்கள் 61,153 பேர் அதாவது 38.3 விழுக்காடினர் மட்டுமே தகுதி பெற்றுள்ளனர். அதாவது 99,976 பேர் தோல்வி அடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்