தஞ்சாவூர் மாவட்டம், மாதாக்கோட்டை நடராஜன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாத் (52). தொழிலாளி. இவர் திண்டுக்கல் சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் தஞ்சாவூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். திருச்சி, டிவிஎஸ் டோல்கேட் மேம்பாலம் அருகே சென்றபோது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர், கோபிநாத்தின் சட்டைப் பையில் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த கோபிநாத், அந்த வாலிபரை மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்றார். அப்போது செல்போன் பறித்த நபர் எதிர்பாராத விதமாக வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை கையும் களவுமாக பிடித்த கோபிநாத், கே.கே.நகர் போலீசாரிடம் ஒப்படைத்தார். போலீசார் அவரை கைது செய்து செல்போனை மீட்டனர். விசாரணையில், கைது செய்யப்பட்டவர் ஸ்ரீரங்கம், மாம்பழச்சாலை, கோலமாவு தெருவைச் சேர்ந்த விஷால் (20) என்பது தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Comments are closed.