நின்ற லாரி மீது கார் மோதல்: கேரளாவுக்கு சுற்றுலா சென்ற திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு…!
திண்டுக்கல் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 7 மாணவர்கள் ஒரே காரில் கேரளாவுக்குச் சுற்றுலா சென்றனர். நேற்று நள்ளிரவு சுமார் 11.50 மணி அளவில் திருச்சூர் தேசிய நெடுஞ்சாலையில் கைப்பமங்கலம் காவல் சரகம் பரம்பிகுன்னு பகுதியில் கார் வேகமாகச் சென்று கொண்டிருந்த போது சாலையோரத்தில் 3 லாரிகள் நிறுத்தப்பட்டு இருந்தன. இந்த இடத்தில் சாலை திருப்பம் உள்ள நிலையில் உரிய வெளிச்சம் இல்லாததால் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரியின் மீது அதிவேகமாக மோதியதில் காரில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் 7 பேர் மற்றும் ஓட்டுநர் உட்பட 8 பேரும் பலத்த காயம் அடைந்தனர். சம்பவ இடத்திலேயே 5 நபர்கள் உயிரிழந்தனர். 2 மாணவர்கள் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் உடலை அப்பகுதி மக்கள் மற்றும் காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் இணைந்து காரை வெட்டி மீட்டனர். உயிரிழந்தவர்களில் கல்லூரி மாணவர்களான திண்டுக்கல்லை சேர்ந்த யுவ சஞ்சித் மற்றும் சூர்யா, மதுரையைச் சேர்ந்த பிரசன்னா, சேலத்தைச் சேர்ந்த விஷ்வா மற்றும் சந்தோஷ், ஜோஸ்வா ஆகியோரின் அடையாளம் அவர்களின் ஐடி கார்டு மூலம் தெரிய வந்துள்ளது. மேலும் 2 பேர் பெயர், முகவரி தெரியவில்லை.
உயிரிழந்தவர்களின் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Comments are closed.