உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
கடந்த 2009 ஏப்ரலில் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது ஐதீகம். ஆனால் 2018, பிப்ரவரி 2ல் கோவிலின் வீரவசந்த ராயர் மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக நடத்தப்படவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில் சீரமைப்பு பணிகள் துவங்கினாலும் கொரோனா ஊரடங்கு, தகுந்த கற்கள் கிடைக்காமை போன்ற காரணங்களால் வீரவசந்த ராயர் மண்டப சீரமைப்பு பணிகள் முடங்கின. கடந்த தி.மு.க., ஆட்சியில் சீரமைப்பு பணிகள் துவங்கப்பட்டதோடு, கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகளும் தொடங்கப்பட்டன. கோவில் நிதி ரூ.15.81 கோடி, உபயதாரர் நிதி ரூ.5.16 கோடி என மொத்தம் ரூ.32.28 கோடியில் பணிகள் நடந்தன. திருப்பணி, யாகசாலை பூஜை என உபயதாரர்களிடம் ரூ.21 கோடி பெறப்பட்டது. அதில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தப் பணிகள் நிறைவுற்ற பிறகு கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. அதன்படி, வருகிற 17-ம் தேதி காலை 7:40 மணி முதல் 8:10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி செப்.,6ல் காலை 7 மணிக்கு கும்பாபிஷேகம் தொடர்பான பூஜை துவங்குகிறது. 7 ம் தேதி காலை 7 மணி முதல் 10 மணி வரை நவகோள் யாகவேள்வி நடக்கிறது. 8-ம் தேதி வாஸ்து சாந்தி, 9ம் தேதி வைகையில் இருந்து புனித நீர் எடுத்தல், அன்று மாலை புனித மண் எடுத்தல், 10ம் தேதி பேரொளி வழிபாடு, மாலையில் முளைப்பாரி இடுதல் நடக்கிறது. செப்.11மாலை முதல்கால யாகசாலை பூஜை துவங்குகிறது. செப்.,17 வரை மொத்தம் 12 கால யாகசாலை பூஜை நடக்கிறது. செப்.,17ம் தேதி காலை 7:40 மணிக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் தங்க விமானங்களுக்கும், ராஜ கோபுரங்களுக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 7:55 மணிக்கு அம்மன் மூலஸ்தானத்திற்கும், காலை 8:10 மணிக்கு சுந்தரேஸ்வரர் மூலஸ்தானத்திற்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Comments are closed.