சாலை விபத்தில் உயிரிழந்த 4 மாணவிகளின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் விஜய் அறிவிப்பு..!
நாமக்கல் மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், கொன்னையார் கிராமத்தில் நேற்று (03.09.2026) மாலை, கல்லூரியில் பயின்று வந்த அதே கிராமத்தைச் சேர்ந்த சேகர் மகள் சுபிதா ( வயது 19 ) என்ற மாணவி பள்ளியில் பயின்றுவரும் தனது சகோதரிகளான நிவேதா (17), தனுஸ்ரீ (13 ) மற்றும் ரமேஷ் பாபு மகள் அபிநயா (12 )
ஆகியோரை அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது தனியார் கல்லூரிப் பேருந்தில் மோதிய விபத்தில் நிவேதா, தனுஸ்ரீ மற்றும் அபிநயா ஆகியோர் சம்பவ இடத்திலேயும், சுபிதா என்பவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலும் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையுமடைந்தேன்.
இவ்விபத்தில் உயிரிழந்த நான்கு மாணவிகளின் பெற்றோர்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்
கொள்வதோடு, உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்குத் தலா 3 லட்சம் ருபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.