தூய்மை பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மகப்பேறு விடுப்பு, கழிப்பறை மற்றும் ஓய்வறை, சம்பளத்துடன் கூடிய வார விடுமுறை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில், 15 நாட்களுக்கு மேலாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட தூய்மைப் பணியாளர்கள், சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்றி தரும் என தெரிவித்தார். இந்தநிலையில், போராட்டம் நடத்தி வரும் தூய்மைப் பணியாளர்களை அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், சிடிஆர் நிர்மல்குமார் ஆகியோர் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது முந்தைய அரசுகள் கஜானாவை காலியாக்கி விட்டதாகவும், இருப்பினும் கலந்து பேசி உங்களது கோரிக்கைகள் படிப்படியாக விரைவில் நிறைவேற்றப்படும் எனவும் அமைச்சர்கள் தூய்மைப் பணியாளர்களிடம் எடுத்துக் கூறினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

Comments are closed.