தமிழக நிதி அமைச்சராகப் பதவி வகித்து வரும் மரிய வில்சன், கடந்த 2022 ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி தொழில் போட்டி காரணமாக, புதுச்சேரி எழில் நகரில் வசித்து வந்த தனது உடன்பிறந்த சகோதரர் மரிய கிளோத் மற்றும் அவரது மனைவி கெரோலின் ஆகியோரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்தவர்களை உருட்டுக்கட்டையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். இந்த சம்பவம் தொடர்பாக மரிய கிளோத் மற்றும் அவரது மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் மரிய வில்சன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சூழலில், வழக்கு விசாரணைக்காகப் பலமுறை வாய்தா வழங்கப்பட்ட போதிலும், அமைச்சர் மரிய வில்சன் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. நீதிமன்றத்தில் ஆஜராகும்படி மரிய வில்சனுக்கு புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இதற்கிடையே, தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் அமைச்சர் மரிய வில்சன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, நிதி அமைச்சர் மரிய வில்சன் இங்கிலாந்தின் அரசர் அல்ல…என்றும் நரசிம்ம ராவ் பிரதமராக இருந்த போது கூட நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்கிறார் என்றும் சுட்டிக்காட்டினார். அப்போது மரிய வில்சன் தரப்பில், ஆகஸ்ட் 31ம் தேதிக்குப் பிறகு புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் மரிய வில்சன் ஆஜராகவதாக உறுதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் புதுச்சேரி நீதிமன்றத்தில் இன்று(04-09-2026) விசாரணைக்கு ஆஜரானார். நிதி அமைச்சர் மரிய வில்சன் இங்கிலாந்தின் அரசர் அல்ல…என்று கூறி நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு கோரிய மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்த நிலையில் இன்று மரிய வில்சன் நேரில் ஆஜராகியுள்ளார்.

Comments are closed.