Rock Fort Times
Online News

பிரதமர் வேட்பாளராக விஜய்: காங்கிரஸ் அமைச்சர்கள் பதவி விலக தயாரா?* திருச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி..!

நரேந்திர மோடி குஜராத் மாநில முதலமைச்சராகவும், பாரதப் பிரதமராகவும் மக்கள் பணியாற்றி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு சாதனை விளக்க கூட்டம் நடைபெற உள்ளது. பிரதமரின் பிறந்தநாளான செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 17 வரை ஒரு மாத காலத்திற்கு பிறந்தநாள் கொண்டாட்டமாக மட்டும் இல்லாமல், பாஜக தொண்டர்கள் தங்களைச் சமூக சேவையில் ஈடுபடுத்திக் கொண்டு, மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான பயிலரங்கம் பாஜக சார்பில் திருச்சி, சமயபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று(02-09-2026) பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பா.ஜ.க.மூத்த தலைவர்களான எச்.ராஜா, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. முன்னதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

சட்டமன்றத்தில் காவிரி பிரச்சனை தொடர்பான முக்கிய விவாதங்கள் எதுவும் நடக்காமல் தனிப்பட்ட விவாதங்கள் மட்டுமே நடந்து வருகின்றன. கர்நாடகாவில் வெள்ளம் வந்தால் மட்டுமே நமக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அதை நாம் பெருமையாக பேசிக் கொள்வதை விட நமக்கு வேறு அவமானம் எதுவும் இல்லை. தற்போது பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் விஜய்க்கும், ராகுல் காந்திக்கும் இடையே போட்டி நிலவுவதாக தகவல்கள் வருகின்றன. ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு த.வெ.க. தரப்பிலிருந்து வரும் வரை நாங்கள் அமைச்சரவையில் நீடிக்க மாட்டோம் என்று அறிவிக்க காங்கிரஸ் அமைச்சர்களுக்கு துணிச்சல் இருக்கிறதா? அதை அவர்கள் முதலில் செய்து காட்டட்டும். இவ்வாறு அவர் கூறினார்.

காஸ்ட்லி முதலமைச்சர்,

நயினார் நாகேந்திரன் கூறுகையில், மேட்டூர் அணையைத் திறந்து வைக்க முதலமைச்சர் சென்றதற்கே 5 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த அணையை கட்டியதற்கே அன்று 4 கோடி ரூபாய்தான் செலவானது. ஒரு ‘காஸ்ட்லி’ முதலமைச்சராகச் செயல்படுகிறார் விஜய். காவிரி நீரைத் திறந்து விடக் கோரி கர்நாடக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். ஆனால், முதலமைச்சர் இதுகுறித்து ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. இத்தனைக்கும் தமிழக ஆளுங்கட்சியின் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிதான் கர்நாடகாவில் ஆட்சி செய்கிறது. அப்படியிருந்தும் தமிழக அரசு காவிரி நீரைப் பெற அழுத்தம் தராமல் மௌனம் காப்பது ஏன்? தற்போது திறந்து விடப்பட்டுள்ள காவிரி நீர், கடைமடைப் பகுதிகளுக்குச் சென்று சேரவே குறைந்தது 12 நாட்கள் ஆகும். முறையான பாசன நீர் கிடைக்காததால் ஏற்கனவே 2 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் பயிரிடப்படாமல் பாழாகிக் கிடக்கின்றன. இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்குத் தமிழக அரசு உடனடியாக உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும். காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்கிறார்கள். ஆனால், த.வெ.க தரப்பிலோ விஜய்தான் பிரதமர் வேட்பாளர் என்கிறார்கள். பிரதமராவதற்கு யாருக்குத் தகுதி இருக்கிறது என்பது இரண்டாவது விஷயம். ஆனால், தங்களுக்குள் இப்படி ஒருமித்த கருத்து இல்லாமல் முரண்பட்டுக் கொண்டிருக்கும் இவர்கள், தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன நன்மைகளைச் செய்யப் போகிறார்கள்? இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்