பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா இன்று (ஆகஸ்ட் 31) கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, செப்டம்பர் 9ம் தேதி தேரோட்டம் நடக்க உள்ளது. முன்னதாக இன்று திங்கட்கிழமை அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதய மார்த்தாண்ட அபிஷேகத்தைத் தொடர்ந்து, காலை 5.15 மணிக்கு திருவிழா கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து இன்று மாலை அப்பர் சுவாமிகள் கோயிலில் இருந்து தங்கச் சப்பரத்தில் புறப்பட்டு வீதிகளில் உழவாரப்பணி செய்யும் நிகழ்ச்சி, இரவு ஸ்ரீபெலி நாயகர் அஸ்திர தேவருடன் பல்லக்கில் 9 சன்னிதிகளில் வீதியுலா வரும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகின்றன. செப்டம்பர் 4 ம் தேதி ஐந்தாம் திருவிழாவை முன்னிட்டு மேலக் கோயிலில் இரவு 7.30 மணிக்கு குடைவரை வாயில் தீபாராதனை நடைபெற்று சுவாமியும், அம்மனும் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் வீதியுலா வருதல், ஐந்தாம் தேதி காலை கோ ரதம், இரவு வெள்ளி ரதம் வீதியுலா வருதல், ஆறாம் தேதி அதிகாலை 5 மணிக்கு சண்முகப் பெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி, 9 மணிக்கு சுவாமி சண்முகப் பெருமான் வெட்டி வேர் சப்பரத்தில் பிள்ளையன் கட்டளை மண்டபத்தை சேருதல், மாலை 4 மணிக்கு சுவாமி தங்கச் சப்பரத்தில் சிவப்பு சாத்தியில் வீதியுலா வருதல், ஏழாம் தேதி காலை 5 மணிக்கு பெரிய வெள்ளிச் சப்பரத்தில் வெள்ளை சாத்தியில் சுவாமி வீதியுலா வந்து மேலக்கோயில் சேருதல், நண்பகல் 12 மணிக்கு பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தியில் சுவாமி வீதியுலா வந்து கோயில் சேருதல், ஒன்பதாம் தேதி காலை 7 மணிக்கு தேரோட்டம் ஆகியவை நடைபெறுகின்றன.

Comments are closed.