சென்னை அண்ணா சதுக்கம் காவல் நிலைய தலைமைக் காவலர் சரவணன், முதல்நிலைக் காவலர் நாகேந்திரன் ஆகியோர் கடந்த 24-ம் தேதி காலை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற இளைஞர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் விசாரித்துள்ளனர். போலீஸாரின் கேள்விகளுக்கு, அந்த இளைஞர் சரியாக பதில் அளிக்காமல் அங்கிருந்து சென்றுள்ளார். இதையடுத்து, அவரை காவல்துறையின் எப்ஆர்எஸ் எனப்படும் முக அடையாளத் தொழில் நுட்பம் (Face Recognition System) மூலம் சோதனை செய்துள்ளனர். இதில், அவர் திருச்சியைச் சேர்ந்த 32 வயதுடைய இளைஞர் என்பதும், கடந்த ஆண்டு திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் இவரை காணவில்லை என்ற வழக்குப் பதிவாகி இருந்ததும் தெரியவந்தது. மேலும், அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், திருச்சி மாவட்டம் கீழவயலூர் பகுதியில் செயல்படும் தனியார் காப்பகத்தில் தங்கி இருந்துள்ளார். அங்கிருந்து கடந்த ஆண்டு நவம்பர் 1ம் தேதி அன்று திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக காப்பக ஊழியருடன் சென்றபோது மாயமானது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், அவர் சென்னையில் உள்ள ‘கருணை உள்ளங்கள்’ அமைப்பினரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டார். பின்னர் ஆக.25-ம் தேதி திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீஸாரிடம் அவர் முறைப்படி ஒப்படைக்கப்பட்டார். எப்ஆர்எஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காணாமல் போனவரை விரைந்து கண்டுபிடிக்க உதவிய தலைமைக் காவலர் சரவணன், முதல் நிலைக் காவலர் நாகேந்திரன் ஆகியோரை சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.

Comments are closed.