சென்னை, கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்ததாகக் கூறி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின், தனது வேட்புமனுவில் திமுக அறக்கட்டளையின் நிர்வாகியாக இருப்பதையும், அந்த அறக்கட்டளைக்கு ரூ.2.27 கோடி மதிப்பிலான நிலம் வாங்கிய விவரத்தையும் தெரிவிக்கவில்லை என்று குற்றம்சாட்டி, தேசிய மக்கள் கட்சியின் வேட்பாளர் சிவஞானசம்பந்தம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். மேலும், இதுகுறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், அறக்கட்டளை தொடர்பான சொத்து விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளதால் விசாரணை அவசியம் என வலியுறுத்தப்பட்டது. அதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், இதுபோன்ற விவகாரங்களில் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மட்டுமே தனிநபர் புகார் அளிக்க முடியும் என்று தெரிவித்தது. இரு தரப்பின் வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், வேட்புமனுவில் தனிப்பட்ட சொத்து விவரங்களையே குறிப்பிட வேண்டும் என்றும், அறக்கட்டளையின் சொத்துகள் தனிப்பட்ட சொத்துகளாக கருதப்பட முடியாது என்றும் தெரிவித்தது. மேலும், அந்தச் சொத்துகளுடன் மு.க.ஸ்டாலினுக்கு தனிப்பட்ட உரிமை அல்லது தொடர்பு இருப்பதை நிரூபிக்கும் எந்த ஆதாரமும் இல்லை என்பதால் நோட்டீஸ் பிறப்பிக்க முடியாது என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து, மனுதாரர் சிவஞானசம்பந்தம் தனது மனுவை திரும்பப் பெறுவதாக தெரிவித்தார். அதையடுத்து, மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Comments are closed.