Rock Fort Times
Online News

மேகதாது அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை…* அன்புமணி கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்! 

நாடாளுமன்ற மாநிலங்கள வையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. மேகதாது அணை குறித்து எழுத்துப்பூர்வமாக சில கேள்விகளை எழுப்பியிருந்தார். அதாவது காவிரி நீர் தொடர்பாக பிரச்சனை குறித்து கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பின்படி கர்நாடகா, காவிரி ஆற்றின் குறுக்கே எந்த வகையான கட்டமைப்பும் அமைப்பதற்கு தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒப்புதலை பெற வேண்டும் என்பது மத்திய அரசின் கவனத்திற்கு வந்துள்ளதா?.. மேலும் முன்மொழிபட்டுள்ள மேகதாது திட்டத்திற்காக கர்நாடக அரசு தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒப்புதலை பெற்றுள்ளதா? அவ்வாறு பெற்று இருந்தால் அதன் விவரங்கள் மற்றும் மத்திய அரசின் முன் தற்போது இந்த  மேகதாது திட்ட முன்மொழியின் நிலை என்ன என கேள்விகள் கேட்டு இருந்தன. இந்த கேள்விக்கு மத்திய ஜல்சக்தி துறை இணை மந்திரி ராஜ் பூஷன் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது; காவிரி நீர் தொடர்பான பிரச்சனை குறித்து சுப்ரீம் கோர்ட் கடந்த 2018 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ம் தேதி வழங்கிய தீர்ப்பின் படி காவிரி ஆற்றின் குறுக்கே எந்த வகையான கட்டமைப்பும் அமைப்பதற்கு கர்நாடக மாநிலம் தமிழ்நாடு,கேரளா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒப்புதலை பெற வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை. மேலும் அந்த தீர்ப்பில் காவிரி நீர் தீர்ப்பாயம் 2007ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பின் 18 வது பிரிவு பொருத்தமானது என்று குறிப்பிட்டுள்ளது. அதாவது இந்த தீர்ப்பாயத்தின் எந்த உத்தரவும் எந்த மாநிலமும் தனது மாநில எல்லைக்குள் நீரை பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்கான அதன் உரிமை அதிகாரம் மற்றும் ஆற்றலை குறைக்கவோ, பாதிக்கவோ கூடாது. மேலும் இந்த தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு முரணாக இல்லாத வகையில் அந்த மாநில எல்லைக்குள் உள்ள நீரின் பயன்களை அனுபவிக்கும் அதன் உரிமையையும் அது பாதிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தி உள்ளது. கர்நாடகாவின் மேகதாது நீர்த்தேக்கம் மற்றும் குடிநீர் திட்டம் தொடர்பான விரிவான திட்ட அறிக்கை கடந்த 2019 ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டது.அந்த திட்ட அறிக்கை காவிரி தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு இணங்கவும் தற்போது நடைமுறையில் உள்ள மத்திய நிர்வாகத்தின் வழிகாட்டுதலின் படி திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கேட்டு திட்ட அதிகாரிகளிடம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் அன்புமணி எழுதிய மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த மத்திய மந்திரி, காவிரி நீர் பங்கீடு தொடர்பாக காவிரி நீர் ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஆகியவை இரண்டு வாரங்களுக்குள் ஒருமுறை நிலைமையை ஆய்வு செய்து தேவையான அளவு நீரை திறந்து விடுமாறு கர்நாடகா அரசுக்கு உரிய உத்தரவுகளை வழங்கி வருகிறது என்று தெரிவித்தார்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்