Rock Fort Times
Online News

தமிழகத்தில் பால், தயிர் விலை உயர்வு… மக்கள் அதிர்ச்சி..!

இந்தியா முழுவதிலும் பால் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமல்லாது. அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரியிலும் கடந்த ஓராண்டாகவே பால் உற்பத்தி சரிவை சந்தித்துள்ளது. இதனால், தனியார் பால் நிறுவனங்கள், பால் வணிகத்தை தக்கவைத்துக்
கொள்ள பால் உற்பத்தியாளர்களுக்கு போட்டி போட்டுக்கொண்டு பால் கொள்முதல் விலையை உயர்த்தி வருகின்றன. இந்த நிலையில், தமிழகத்தில் நடப்பாண்டில் 2-வது முறையாக தனியார் பால் நிறுவனங்கள் பால், தயிர் விலையை உயர்த்தியுள்ளன. அமிர்தா. திருமலா, ஜெர்சி, ஹெரிடேஜ், வேதா, சக்ரா நிறுவனங்களின் பால், தயிர் விலை லிட்டருக்கு 2 ரூபாய் முதல் 4 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ஆரோக்யாவை தொடர்ந்து அமிர்தா, வேதா. சன், ராஜ், சக்ரா, திருமலா, ஜெர்சி, ஹெரிடேஜ், டோட்லா உள்ளிட்ட நிறுவனங்கள் நிகழாண்டில் 2-வது முறையாக பால், தயிர் ஆகியவற்றின் விலையை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.4 வரை உயர்த்தியுள்ளன. பால் உற்பத்தி குறைவு, கொள்முதல் விலை மற்றும் மூலப்பொருள்களின் விலை உயர்வு காரணமாக விலை உயர்த்தப்பட்டாலும், பால் முகவர்களின் ‘கமிஷன்’ மற்றும் ஊக்கத் தொகையை உயர்த்த தனியார் நிறுவனங்கள் முன்வரவில்லை. எரிபொருள், கடை வாடகை, ஊழியர் ஊதியம் உள்ளிட்ட செலவுகளைக் கருத்தில் கொண்டு, பால் முகவர்களுக்கு சதவீத அடிப்படையில் கமிஷன் மற்றும் ஊக்கத் தொகை வழங்க வேண்டும். இந்த ஆண்டில், மொத்தமாக லிட்டருக்கு ரூ.6 வரை விலை உயர்ந்துள்ளதால், குறைந்த விலை கொண்ட ஆவின் பாலை மக்கள் அதிகம் வாங்கும் நிலை உருவாகியுள்ளது. அதனால், ஆவின் பாலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்புள்ளதால். தமிழகத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்