புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சி.விஜயபாஸ்கர், அதிமுக தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். திமுக பக்கம் சாயலாமா? என்று யோசித்த அவருக்கு அங்கு அவரை சீண்டுவார் யாரும் இல்லை. அதோடு திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி, விஜயபாஸ்கரை கட்சியில் சேர்க்கக்கூடாது என்று முட்டுக்கட்டை போட்டார். இதனால் தமிழக வெற்றி கழகம் பக்கம் செல்லலாம் என்று யோசித்தார். அங்கும் அவருக்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த த.வெ.க. அமைச்சர் மற்றும் நிர்வாகிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர் இதனால் அங்கும், இங்கும் அல்லாடிய அவர் ஒரு வழியாக த.வெ.க.வில் ஐக்கியமானார். சுமார் 15,000 பேருடன் முதல்வர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைவதாக ஏகத்துக்கும் ‘பில்டப்’ கொடுத்த அவரை முதல்வர் விஜய் கண்டுகொள்ளவே இல்லை. கடைசியில் த. வெ.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஆனந்த் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
அதன்பிறகு புதுக்கோட்டை திரும்பிய அவரை சீண்டுவார் யாரும் இல்லை. இதனால், த.வெ.க. வில் தனக்கு மரியாதை இல்லை என்பதை உணர்ந்து கொண்ட அவர், முதல்வரை சந்தித்து ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டால் தான் நமக்கு மரியாதை என்று நான்கு நாட்கள் தவமாய் தவம் இருந்து யார் யாரையோ பிடித்து ஒருவழியாக இன்றைய தினம் (ஜூலை 6) முதல்வர் விஜய்யை சந்தித்து விட்டார். அந்தப் புகைப்படத்தை சமூக வலைதளங்களிலும் பரவ விட்டு அதில், “வரலாறு எழுத பலர் வருவார்கள், வரலாற்றையே மாற்ற சிலரே வருவார்கள் என்று முதல்வர் விஜயை ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளி இருக்கிறார். இதெல்லாம் எதற்கு என்று எங்களுக்கு தெரியாதா? அவர் மீதுள்ள குட்கா ஊழல் குற்றச்சாட்டை மறைக்கவும், மீண்டும் விராலிமலை தொகுதியில் சீட்டு வாங்கவும் தான் காய் நகர்த்துகிறார் என்று புதுக்கோட்டை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ‘நமட்டு’ சிரிப்பு சிரிக்கிறார்கள். ஏராளமான இளைஞர் பட்டாளத்தைக் கொண்டது, தமிழக வெற்றி கழகம். அவர்களை விஜயபாஸ்கர் எப்படி சமாளிக்க போகிறார் என்று தான் தெரியவில்லை. இது போதாது என்று விஜயபாஸ்கர் மீதான குட்கா ஊழல் வழக்கை 12 வாரங்களுக்குள் முடிக்க எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.