திமுகவுக்கு வரச்சொல்லி ரூ.50 கோடி பேரம்: ஸ்ரீவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ. தூக்கி போட்ட ‘புது குண்டு’…! (ஆடியோ இணைப்பு)
தமிழக அரசியல் களம் இதுவரை இல்லாத அளவுக்கு தினம் தினம் புதுப்புது பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. த.வெ.க. ஆட்சியை கவிழ்க்க அக்கட்சியை சேர்ந்த கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை
த. வெ.க. சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவுக்கு ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் தொடர்பாக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஈடுபட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்தநிலையில், திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உதவியாளர்கள் பெயரில் தன்னிடம் பேரம் பேசியதாக ஸ்ரீவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ விஜி சரவணன் குற்றம்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:
எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்து திமுகவில் இணைந்தால் சுமார் ரூ.50 கோடி தருவதாக கூறினர். அதோடு அமைச்சர் பதவியும் தருவதாக பேரம் பேசினர். அனிதா ராதாகிருஷ்ணன் ஆட்கள் என்னிடம் பேரம் பேசினர். பேரத்துக்கு இணங்காவிட்டால் என்ன செய்வோம் என்று தெரியாது என மிரட்டினர். ஸ்ரீவைகுண்டத்தில் எனது வெற்றியால் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக, அதிமுக, பாஜக இணைந்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புகின்றனர். என்று கூறினார். அப்போது தன்னிடம் பேரம் பேசியதாக கூறப்படும் ஆடியோ ஒன்றையும் விஜி சரவணன் வெளியிட்டார். ஏற்கனவே தவெக எம்.எல்.ஏ இளையராஜா அளித்த பேரம் புகாரில் சிலர் கைதான நிலையில் புதிய புகார் எழுந்துள்ளது, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed.