சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா இன்று ( 24-06-2026) நடைபெற்றது. விழாவில் தமிழக முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு, தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை நேரில் வழங்கினார்.டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்ட மொத்தம் 401 பேருக்கு இந்த விழாவில் பணி ஆணைகள் வழங்கப்பட்டன. இதில் 383 உதவிப் பொறியாளர்கள் மற்றும் 18 உதவி கணக்கு அலுவலர்கள் தங்களது பணி நியமன ஆணைகளைப் பெற்றுக் கொண்டனர். இதே விழாவில், நடப்பு ஆண்டிற்குள் மின்வாரியத்தில் காலியாக உள்ள 15,000 பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணைக்கு முதலமைச்சர் விஜய் ஒப்புதல் அளித்துள்ளார் என்ற அதிரடி அறிவிப்பும் வெளியானது. இந்த விழாவில் உதவிப் பொறியாளராகத் தேர்வாகியிருந்த அட்சயலட்சுமி ஒரு நிறைமாத கர்ப்பிணி ஆவார். இன்னும் சரியாக 3 நாட்களில் அவருக்குப் பிரசவம் நடக்கவிருக்கும் சூழலிலும், தனது வாழ்வின் முக்கிய அங்கீகாரத்தைப் பெற அவர் விழாவிற்கு வந்திருந்தார். அட்சயலட்சுமியின் நிலையைக் கண்ட முதலமைச்சர் விஜய், சற்றும் யோசிக்காமல் உடனடியாக மேடையில் இருந்து கீழே இறங்கி வந்து அவரிடம் பணி நியமன ஆணையை வழங்கினார். அந்தப் பெண் முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

Comments are closed.