Rock Fort Times
Online News

அதிமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க திமுக முயன்றதே அப்போது உங்களுக்கு வெட்கமில்லையா?- ஆ.ராசா பேச்சுக்கு விசிக காட்டமான பதிலடி!

தவெக அமைச்சரவையில் இடம்பெற்றவர்களுக்கு வெட்கமில்லை யா? என விமர்சித்த திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசாவுக்கு விசிக நிர்வாகி எழில் கரோலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,’2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் மட்டுமே வென்றதால் தன்னிச்சையாக ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதைப் பயன்படுத்தி ‘குடியரசுத் தலைவர் ஆட்சி’ என்கிற பெயரில் தமிழ்நாட்டில் மறைமுக ‘பாஜக ஆட்சி’ வந்துவிடக் கூடாதென்ற தொலைநோக்குப் பார்வையில் இடதுசாரித் தலைவர்களுடன் கலந்துபேசி தவெக ஆட்சியமைக்க ஆதரவளிப்பது என முடிவெடுத்தார்,
திருமாவளவன். திமுகவுடன் கூட்டணி வைத்து இரண்டு எம்எல்ஏ-க்களை பெற்றோம் என மரியாதைக்காக திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து தகவலை தெரிவித்துவிட்டுத்தான் தவெக-விடம் ஆதரவு கடிதத்தை கொடுத்தோம். அதற்காக, திமுகவிடம் அனுமதி வாங்கிவிட்டு ஆதரவளித்தோம் எனச் சொல்வதைய ஏற்க முடியாது. பின்னர் சிறுத்தைகளின் விருப்பத்தையும் தவெகவின் கோரிக்கையையும் ஏற்று தவெக அமைச்சரவையிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெற்றது. தவெக அமைச்சரவையில் பங்கேற்ற நாள்முதல் திமுகவினர் விடுதலை சிறுத்தைகள் கட்சிமீது தொடர்ச்சியான வன்ம பரப்புரை திட்டமிட்டே
பரப்புகிறார்கள். அதற்கு வன்மையான கண்டனங்களையும் எச்சரிக்கையையும் பதிவு செய்ய விரும்புகிறேன்.

திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, தவெக அமைச்சரவையில் விசிக இடம்பெற்ற நாளன்றே, கொச்சையான விமர்சனங்களை முன்வைத்தார். அதற்கு ஸ்டாலினின் கண்டனத்தை ஏற்று மிகுந்த கண்ணியத்துடன் கடந்து சென்றோம். தற்போது மீண்டும் த.வெ.க அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள கட்சிகளை அவமதிக்கும் விதமாக பேசியிருக்கிறார். அமைச்சரவையில் இடம் கொடுத்தவர்களுக்கும் வெட்கமில்லை, அமைச்சரானவர்களுக்கும் வெட்கமில்லை!” எனக் கேட்கிறார். இத்தகைய காட்டமான விமர்சனங்களை முன்வைக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? ஆ.ராசாக்கு பணிவன்புடன் சில கேள்விகளை முன்வைக்க விழைகிறேன். 40 நாட்களுக்கு முன்னால் ஆர்எஸ்எஸ் பாஜகவின் ஆசியுடன் பரம எதிரி அதிமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க திமுக முயன்றதே. அப்போது உங்களுக்கு வெட்கமில்லையா? விஜய் முதல்வராகவிடாமல் தடுக்க ஒவ்வொரு கட்சியின் கதவுகளையும் நள்ளிரவில் தட்டினாரே உதயநிதி. மக்கள் தீர்ப்பை திருட முயன்றபோது உங்களுக்கு வெட்கமில்லையா?

வாஜ்பாய் அமைச்சரவையில் அங்கம் வகித்தது திமுக, அப்போது வெட்கமில்லையா? ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குகளை விசிக தயவில் பெற்றுக் கொண்டு அதிகாரத்தில் பங்கு தர மறுத்தீர்களே. அப்போது வெட்கமாக இல்லையா? 2026 தேர்தல் சமயத்தில் விசிக வேட்பாளர்களிடம் உங்கள் முன்னாள் அமைச்சர்கள் சாதிய துவேசத்தை வெளிப்படுத்தி, உள்ளடி வேலை செய்து தோற்கடித்தார்களே. அந்த செய்திக் கேட்டு நீங்கள் வெட்கப்படவில்லையா? வாய்துடுக்கான பேச்சுகளும் கூட்டணிக் கட்சிகளை பெரியண்ணன் மனப்பான்மையில் அணுகியதும்தான திமுகவை எதிர்க்கட்சி வரிசையில் அமர வைத்திருக்கிறது என்பதையும் உங்களுக்கு நினைவுகூற விரும்புகிறேன். தோல்வியின் மனவேதனையில் பிதற்றிக் கொண்டிருக்காமல் இனியாவது ஆக்கப்பூர்வ எதிர்க்கட்சி அரசியலை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்