Rock Fort Times
Online News

தமிழ் மொழி, கலாச்சாரம், வரலாற்றை பாஜக அழிக்க நினைக்கிறது…* பொன்னேரியில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந் தேதி நடைபெற இருக்கிறது. மே 4-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. தேர்தலுக்கு இன்னும் குறைந்த நாட்களே இருப்பதால் தேசிய தலைவர்களும் தமிழகம் வருகை தந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் இன்று(18-04-2026) ராகுல்காந்தி எம்பி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு, காலை 11.10 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்கு சென்றார். பொன்னேரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது ராகுல்காந்தி பேசியதாவது:- தமிழ்நாட்டு மக்களின் மீதும், தமிழ் மொழியின்மீதும் அன்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நான் தமிழ்நாட்டில் பிறக்காவிட்டாலும், என் குடும்பம் தமிழ்நாட்டிலிருந்து வராவிட்டாலும் தமிழ் மண்ணை சேர்ந்தவனாகவே உணர்கிறேன். தமிழ் மக்களின் மீதான தாக்குதல் என் மீதான தாக்குதல் போன்றது. இவர்களுக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் தமிழ் கலாசாரம் மீது தாக்குதல் நடத்துவார்கள்?. தமிழர்கள் யார் என்பதை பா.ஜ.க. சரியாக புரிந்து கொள்ளவில்லை. பா.ஜ.க.வும். ஆர்.எஸ்.எஸ்-ம் ஒருபோதும் தமிழ் மொழி, பண்பாடு, கலாசாரத்தைத் தொட முடியாது. வரும் தேர்தலில் ஆர்.எஸ்.எஸ்., பாஜக கூட்டாளிகள் தமிழ் மண்ணில் நுழைய முடியாதபடி செய்ய வேண்டும். தமிழ்நாடு முதல் அமைச்சர் தங்களுக்கு கட்டுப்பட்டிருக்க வேண்டும் என மோடி, அமித் ஷா நினைக்கின்றனர். தமிழ்நாட்டின் எதிர்காலத்தை தமிழ் மக்கள் தீர்மானிக்க வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம். பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். இணைந்து என்ன செய்ய முயல்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அன்று ராணுவம் மூலம் போர் தொடுத்தனர். இன்று ராணுவம் இல்லாமல் போரை நடத்துகிறது பா.ஜ.க. தமிழ்மொழி, கலாச்சாரம், வரலாற்றை அழிக்க நினைக்கின்றனர். நாங்கள் எப்போதும் அதை அனுமதிக்க மாட்டோம். தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை குறைக்கவே தொகுதி மறுவரையறை மசோதா கொண்டு வரப்பட்டது. பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை தொகுதி மறுவரையறை மசோதாவுடன் இணைத்து, தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை குறைக்க பாஜக சதித்திட்டம் தீட்டியது. பாஜகவின் சதித்திட்டத்தை நாம் போராடி முறியடித்தோம். தமிழ்நாட்டை டெல்லியில் இருந்து ஆள பா.ஜ.க. முயற்சிக்கிறது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்தின் குரலும் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்