செங்கோட்டையனுக்கு எதிராக அவரது மனைவியே ஜெயலலிதாவிடம் விவகாரமான புகாரை அளித்தார்… * கோபி தொகுதியில் இபிஎஸ் பரபரப்பு பேச்சு !
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். அந்தவகையில் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வி.பி. பிரபுவை ஆதரித்து இன்று (18.04.2026) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “மாவட்ட ஊராட்சிக் குழு தலைவரே கட்சியை விட்டுப் போகிறார் என்றால் இவர் எப்படிப்பட்டவரா இருப்பார்?. அவ்வளவு கீழ்த்தரமா பேசக்கூடிய மனிதர் செங்கோட்டையன். அவருக்கு மரியாதை கொடுப்பது எல்லாம் பிரயோஜனம் இல்லை. மரியாதை இல்லாத ஒரு மனிதர். ஜெயலலிதா இவருக்கு அமைச்சராக பதவி கொடுத்தபோது, செங்கோட்டையனுடைய மனைவியும், மகனும், தலைமை செயலகத்துக்கு வந்து ஜெயலலிதாவிடம் புகார் கொடுத்தார்கள். அது கேவலமான புகார்.

நான் இந்த பதவியில் இருப்பதால் அதை சொல்லவில்லை. அது என்ன குற்றச்சாட்டு என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும். நான் தலைமை செயலகத்தில் கீழே தான் இருக்கிறேன். அப்போது செங்கோட்டையனின் மனைவியும், மகனும் படிக்கட்டில் கீழே இறங்கி செல்வதற்குள் செங்கோட்டையன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் எப்பேர்பட்ட ஆள் என்று உங்களுக்குத் தெரியும். அதை நான் சொல்லக்கூடாது. ஏன்னென்றால் என்னுடைய பதவிக்கு அது சரியாக இருக்காது. அப்படிப்பட்ட ஒருவரை என்னுடைய அமைச்சரவையில் சேர்த்ததுதான் நான் செய்த தவறு. என்னிடம் செங்கோட்டையன், ‘நீங்கள் முதலமைச்சராக இருக்கும்போது எனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால் யார் எனக்கு வாய்ப்பு கொடுக்க போகிறார்கள்’ எனக் கேட்டார். உண்மையாகவே எனக்கு ஒரு காலத்தில் நல்ல நண்பராகத்தான் இருந்தார். இதனை இல்லையென்று நான் மறுக்கவில்லை. அந்த நட்பின் அடிப்படையில் தான் அவருக்கு பதவியை கொடுத்தேன். ‘நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று’ என்று 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அய்யன் திருவள்ளுவர் கூறிவிட்டுச் சென்றுள்ளார். இது மாதிரி மனிதர்களை எல்லாம் மன்னிக்க முடியுமா?.
செங்கோட்டையன் அவர்களே, நான் எப்படிப்பட்டவன் என்று உங்களுக்கு தெரியாது. எனது ஒரு முகத்தைதான் நீங்கள் பார்த்து இருக்கிறீர்கள். இன்னொரு முகத்தை பார்த்தது இல்லை. நான், முதல்வர் ஸ்டாலின் கண்ணிலேயே கையை விட்டு ஆட்டியவன். விசில் அடிக்கும் கூட்டத்தில் இருந்தால் செங்கோட்டையனின் பேச்சு அப்படிதான் இருக்கும். செங்கோட்டையன் எப்போது சிறுமையாகப் பேச ஆரம்பித்தாரோ, அப்போதே அவர் செல்வாக்கை இழந்துவிட்டார். உங்களது சொந்தத் தொகுதியில் வெற்றி பெற முடியுமா என முதலில் பாருங்கள். அரசியல் ரீதியாக பேசுங்கள்; நான் அதுகுறித்து பதில் சொல்லத் தயார். ஆனால் தனிப்பட்ட முறையில் பேசினால் என்னிடம் நிறைய இருக்கிறது அவற்றை தொலைக்காட்சியில் போட்டு விடுவேன். பின்னர், நீங்கள் கோபியில் நடமாட முடியாது. நான் முதல்வராக இருந்தபோது யார் யார் என்ன செய்தார்கள் என்பது குறித்து எனக்குத் தெரியும். ஜாக்கிரதையாக இருங்கள். அரசியல் ரீதியாக அணுகுங்கள். இவ்வாறு அவர் பேசினார். 8 முறை அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கே.ஏ. செங்கோட்டையன், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து இந்த தொகுதியில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.