பணம் பட்டுவாடா செய்யப்பட்டதா?- திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் வீடு உட்பட 10 இடங்களில் ஐ.டி.’ரெய்டு’…!
போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி பிணையில் உள்ள முன்னாள் திமுக நிர்வாகி ஜாபர் சாதிக்குக்கு சொந்தமான இடங்கள் உட்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் இன்று(06-04-2026) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் வருகிற 23-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதையொட்டி, மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்து வருகிறது. அந்த வகையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், காவல்துறையினர், வருமான வரித்துறை அதிகாரிகள், அமலாக்கத்துறை அதிகாரிகள் பணப்பட்டுவாடா ஏதாவது நடைபெறுகிறதா? என்பதை தீவிரமாக கண்காணித்து சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் ஒரு சிலர் பணப்பட்டுவாடா செய்வதாக வருமானவரித்துறை அதிகாரிகளுக்கும், தேர்தல் பறக்கும் படையினருக்கும் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், வருமானவரித்துறை அதிகாரிகள், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுடன் இணைந்து 10-க்கும் மேற்பட்ட கார்களில் சென்று, சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைகள் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக, சென்னை அண்ணா சாலை, புரசைவாக்கம், எழும்பூர், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2024-ம் ஆண்டு ரூ. 2,000 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்குக்கு சொந்தமான இடங்களிலும், அவர் தொடர்புடைய நிறுவனங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஜாபர் சாதிக் கடந்த 2024-ம் ஆண்டு மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் அமலாக்கதுறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், சில நாட்களுக்கு முன்பு தான் பிணையில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில், தேர்தல் பணப்பட்டுவாடா நடப்பதாக வந்த தகவலின் அடிப்படையில், ஜாபர் சாதிக்குக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சோதனை முழுமையாக முடிந்த பிறகே, ஏதேனும் பதுக்கல் பணம் கைப்பற்றப்பட்டதா? ஜாபர் சாதிக் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டாரா? என்பது குறித்த விவரங்கள் தெரியவரும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் நடைபெறும் இந்த அதிரடி சோதனை, அரசியல் வட்டாரங்களில் புயலைக் கிளப்பியுள்ளது.

Comments are closed.