234 பேரவை உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மே மாதம் 14- ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதேபோல், புதுச்சேரி, கேரளம், அசாம், மேற்குவங்கம் ஆகிய மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலமும் மே மாதத்துடன் நிறைவடைகிறது. இந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் குறித்து நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று (மார்ச் 15) மாலை 4.00 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையிலான தேர்தல் ஆணையர்கள் டாக்டர்.சுக்பீர் சிங் சந்து, டாக்டர்.விவேக் ஜோஷி குழுவினர், தமிழ்நாடு உள்பட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்துதெரிவித்ததுடன், சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் அறிவித்தனர்.
ஒரே கட்டமாகத் தேர்தல்:
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 23- ஆம் தேதி நடைபெறுகிறது; வாக்கு எண்ணிக்கை மே 04- ஆம் தேதி நடைபெறும்; அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பு மனுத்தாக்கல் எப்போது?
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் மார்ச் 30- ம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய ஏப்ரல் 06- ஆம் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை வரும் ஏப்ரல் 07- ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுவைத் திரும்பப் பெறுவதற்கு ஏப்ரல் 09- ஆம் தேதி கடைசி நாளாகும். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினருடன் துணை ராணுவப் படையினர் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றன.

Comments are closed.