Rock Fort Times
Online News

மகளிர் உரிமைத்தொகை இனி ரூ1,000 இல்ல.. பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்…- தேர்தலுக்கு முன்பே செய்து காட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

மகளிர் உரிமைத்தொகை ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: “நமது அரசு சார்பில் இன்று காலை ரூ.5,000 உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. எதற்காக இந்தப் பணம்? நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றபோது கொரோனா உச்சத்தில் இருந்தது. அதை சமாளித்து மக்களின் உயிரை காத்ததுடன், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க ரூ.4,000 நிவாரணத் தொகை வழங்கினோம். முந்தைய ஆட்சி விட்டுச் சென்ற கடுமையான நிதி நெருக்கடியை சமாளித்து பல திட்டங்களை நிறைவேற்றினோம். நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மாதம் ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவித்தேன். அது சாத்தியமில்லை என சிலர் கூறினார்கள். ஆனால் நிதி நெருக்கடியையும், மத்திய அரசின் ஓரவஞ்சனையையும் மீறி, 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்’ வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதலில் 1 கோடி 13 லட்சம் மகளிருக்கு பயனளித்த இந்தத் திட்டம், அண்மையில் விரிவுபடுத்தப்பட்டு தற்போது 1 கோடி 31 லட்சம் குடும்பத் தலைவிகள் பயன்பெற்று வருகின்றனர். இந்த உரிமைத்தொகையை மேம்படுத்த முயற்சிக்கும் நிலையில், அதை நிறுத்த சதி நடைபெறுவதாக தகவல்கள் வருகின்றன. யார் தடை செய்தாலும் நான் பின்வாங்க மாட்டேன். இந்தத் திட்டம் 3 மாதங்கள் நிறுத்தப்பட்டால் நீங்கள் சந்திக்கும் சிரமம் என்ன என்பதை நான் நன்றாக அறிவேன். கோடைக்காலத்தில் வேலைக்கு செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் துன்பம் எனக்குத் தெரியும். குடும்பச் செலவுகள், மருத்துவச் செலவுகள், குழந்தைகளின் கல்விச்செலவுகள் — இவற்றை சமாளிப்பது எவ்வளவு கடினம் என்பதை உணர்கிறேன். அதனால் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3,000 மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகுப்பாக ரூ.2,000 என மொத்தம் ரூ.5,000, 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டப் பயனாளிகளின் வங்கி கணக்கில் இன்று காலை வரவு வைக்கப்பட்டுள்ளது. அடுத்த ‘திராவிட மாடல் ஆட்சி 2.0’ காலத்தில் மாதம் ரூ.1,000 வழங்கப்படும் உரிமைத்தொகையை ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்குவோம். இது என் சகோதரிகளுக்கு நான் அளிக்கும் வாக்குறுதி.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்