பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: திருமலை தரிசன டிக்கெட் இனி உங்கள் மொபைல் வாட்ஸ்-அப் மூலம் பெறலாம்…!
கலியுக தெய்வமாகப் போற்றப்படும் ஸ்ரீ வெங்கடேஸ்வர பெருமாளை தரிசிக்க திருமலைக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். இதனால் தரிசன டிக்கெட்டுகளுக்கு எப்போதும் கடும் போட்டி நிலவுகிறது. இதுவரை ஆன்லைன், ஆஃப்லைன் முறைகளில் மட்டுமே டிக்கெட் கிடைத்த நிலையில், தற்போது எங்கிருந்தாலும் மொபைல் மூலமாகவே டிக்கெட் பெறும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. ஆந்திர மாநில அரசு தற்போது அறிமுகப்படுத்தியுள்ள புதிய வாட்ஸ்-அப் சேவை மூலம், வீட்டிலிருந்தபடியே சில நிமிடங்களில் தரிசனம் மற்றும் சேவை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இந்த புதிய வசதிக்காக அரசு WhatsApp Governance முறையைப் பயன்படுத்தியுள்ளது. பக்தர்கள் முதலில் 95523 00009 என்ற எண்ணை தங்கள் மொபைலில் சேமித்து, “Hi” என்று மெசேஜ் அனுப்ப வேண்டும். அதன் பிறகு கிடைக்கும் மெனுவில் சேவைகள் பட்டியல் தோன்றும். இதில் “கோவில் முன்பதிவு சேவைகள்” என்ற விருப்பத்தைத் தேர்வு செய்தால், கோவில் சார்ந்த முன்பதிவு வசதிகளை எளிதாக அணுகலாம். இந்த சேவையில் திருமலை மட்டுமல்லாமல், ஸ்ரீசைலம், கனிபாகம், அன்னவரம், விஜயவாடா, ஸ்ரீகாளஹஸ்தி போன்ற ஆந்திராவின் முக்கிய கோவில்களும் இடம் பெற்றுள்ளன. நீங்கள் செல்ல விரும்பும் கோவிலைத் தேர்வு செய்து, தரிசனம் அல்லது சேவை வகையைத் தேர்வு செய்து, பக்தரின் முழு விவரங்களையும் பதிவு செய்தால் போதும், டிக்கெட் கிடைத்துவிடும். மொத்தத்தில், இந்த வாட்ஸ்அப் டிக்கெட் முறை பக்தர்களின் நேரத்தையும், சிரமத்தையும் பெரிதும் குறைக்கிறது. தொழில்நுட்பம் இப்போது பக்திக்கும் உதவத் தொடங்கியுள்ளது. குறிப்பாக வயதானவர்கள் மற்றும் தொலைதூர பக்தர்களுக்கு இந்த வசதி ஒரு பெரிய வரமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

Comments are closed.