Rock Fort Times
Online News

அமமுக மாணவியர் அணியில் புதிய மாற்றம்: டிடிவி தினகரன் எடுத்த அதிரடி நடவடிக்கை..!

தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இத்தகைய சூழலில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள சசிகலாவின் வீட்டில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக (அமமுக) மாணவியர் அணி செயலாளராக இருந்த ஜீவிதா நாச்சியார் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து, ஜீவிதா நாச்சியாரை கட்சியிலிருந்து நீக்கி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கட்சியின் கொள்கை, குறிக்கோள் மற்றும் கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் ஏற்படும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், மாணவியர் அணி செயலாளர் ஜீவிதா நாச்சியார் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். எனவே, கட்சியின் உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது” எனத் தெரிவித்துள்ளார். மேலும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாணவியர் அணி செயலாளராக தனம் அபிநயா (சிவகங்கை மாவட்ட மாணவியர் அணி செயலாளர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார். கட்சி உடன்பிறப்புகள் அனைவரும் அவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்