பழனி தைப்பூசத்திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று (ஜன.31) திருக்கல்யாணமும், நாளை தேரோட்டமும் நடக்கிறது. இதனையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தவண்ணம் உள்ளனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாது நள்ளிரவிலும் பக்தர்கள் அரோகரா… கோஷம் எழுப்பியபடி வந்தவண்ணம் உள்ளனர். இதனால் பழனியில் திரும்பிய திசையெல்லாம் பக்தர்கள் தலையாக காட்சி அளிக்கிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் பழனி மலைக்கோவிலில் 2 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இன்று முதல் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கும் என்பதால் அதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பக்தர்கள் வருகை அதிகரிப்பால் மலைக்கோவிலில் சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் நிலை உள்ளது. அவ்வாறு காத்திருக்கும் பக்தர்களுக்கு பிஸ்கெட், தண்ணீர் பாட்டில், சிற்றுண்டி உள்ளிட்டவை கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. வழக்கமாக இன்று முதல் 3 நாட்களுக்கு மலைக்கோவிலில் தங்க ரத புறப்பாடு ரத்து செய்யப்பட்ட நிலையில் கட்டண தரிசனமும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.