ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேரோட்டம்- ரெங்கா… ரெங்கா… கோஷம் விண்ணதிர வடம் பிடித்த பக்தர்கள்…!
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் பூபதித் திருநாள் எனப்படும் தை தேர்த்திருவிழா 11 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். அந்தவகையில் இந்த ஆண்டுக்கான தைத்தேர் திருவிழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் காலை, மாலை வேளைகளில் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் உத்திர வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவின் 1-ம் திருநாளான 26-ந்தேதி தங்க கருடவாகனத்தில் நம்பெருமாள் உத்தர வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவிழாவின் 8-ம் நாளான நேற்று மாலை தங்க குதிரை வாகனத்தில் நம்பெருமாள் புறப்பட்டு உத்திர வீதிகளில் வலம் வந்து வையாளி கண்டருளுளினார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று(31-01-2026) காலை விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் அதிகாலை 4 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு தைத்தேர் மண்டபத்திற்கு அதிகாலை 1.30 மணிக்கு வந்தார். காலை 4.45 மணி முதல் காலை 5.30 மணிவரை ரதரோஹணம் (தனுர் லக்னத்தில்) நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் எழுந்தருளிய பின்னர் காலை 6 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ரெங்கா, ரெங்கா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு உத்திர வீதிகள் வழியாக காலை 9.15 மணிக்கு வந்து நிலையை அடைந்தது. தேரின் முன் பக்தர்கள் தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி பெருமாளை தரிசனம் செய்தனர். நாளை (பிப்.1-ந்தேதி) சப்தாவரணம் நிகழ்ச்சி நடக்கிறது. நிறைவு நாளான 2-ந்தேதி மாலை 3 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு மாலை 3.30 மணிக்கு ரெங்கவிலாச மண்டபம் வருகிறார். அங்கிருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு வாகன மண்டபம் சென்றடைகிறார். வாகன மண்டபத்தில் இருந்து இரவு 8 மணிக்கு நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் புறப்பட்டு நான்கு உத்திர வீதிகளில் வலம் வந்து இரவு 9 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைகிறார். பின்னர் அங்கிருந்து இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவதோடு தைத்தேர் திருவிழா நிறைவடைகிறது. தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் சிவராம் குமார் மற்றும் கோவில் அலுவலர்கள், ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Comments are closed.