அரசு பள்ளித் தூதுவர் திட்டத்தை தொடங்கி வைத்தார், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி… இதன் நோக்கம் என்ன?
அரசு பள்ளித் தூதுவர் திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (30.01.2026) சென்னை, அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து முன்னாள் மாணவர் வழிகாட்டுதல் திட்டத்தினை தொடங்கி வைத்து, விழுதுகள் செயலியினை வெளியிட்டார். இந்நிகழ்வில் பள்ளிக் கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தர மோகன், மாநில திட்டக்குழு செயல் துணைத்தலைவர் ஜெ.ஜெயரஞ்சன், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் மற்றும் விண்வெளித்துறை செயலர் வி.நாராயணன், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, மாதிரிப்பள்ளிகள் உறுப்பினர் செயலர் ஆர்.சுதன் (வி.ஓய்வு), பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், அரசுப் பள்ளி தூதுவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
திட்டத்தின் நோக்கம்:
அரசு பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாக, கடந்த ஆண்டு ஜனவரி 9ம் தேதி, ‘விழுதுகள்’ என்ற முன்னெடுப்பு துவக்கப்பட்டது. இதுவரை, 8.5 லட்சம் முன்னாள் மாணவர்கள், தங்கள் பள்ளியுடன் இணைந்துள்ளனர். அடுத்த கட்டமாக, முன்னாள் மாணவர்களை, பள்ளி தூதுவர்களாக நியமிக்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இதன்படி, 6,000 பள்ளி களில் முதற்கட்ட முயற்சியாக, சாதனை செய்த முன்னாள் மாணவர்கள், அந்த பள்ளி தூதுவர்களாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இவர்கள், தற்போது படிக்கும் மாணவர்களின் உயர் கல்விக்கு வழிகாட்டுவது, பள்ளியின் உள்கட்டமைப்பு பணிகளுக்கு உதவுவது போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படுவர். இதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இதற்கு விண்ணப்பிப்பவர்கள், அந்த பள்ளியில் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் படித்தவராக இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

Comments are closed.