Rock Fort Times
Online News

சிறையில் அடைப்பதற்காக கைதியை அழைத்துச் சென்றபோது போலீசார் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு…- 3 பேர் காயம்…!

மதுரையைச் சேர்ந்த காளி என்கிற வெள்ளை காளி என்பவர் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். அவர் மீது மதுரை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு நிலுவையில் உள்ளது. அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திவிட்டு சென்னை புழல் சிறையில் அடைப்பதற்காக வேனில் அழைத்து சென்று கொண்டிருந்தனர். பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை அருகே வேனை நிறுத்திவிட்டு அங்குள்ள ஒரு உணவகத்தில் அனைவரும் சாப்பிட்டு கொண்டு இருந்தனர். அப்போது இரண்டு கார்களில் வந்த 15க்கும் மேற்பட்டோர் நாட்டு வெடிகுண்டை வீசி வெள்ளைக்காளியை கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் அங்கிருந்து காரில் வேகமாக தப்பி சென்றனர். நாட்டு வெடிகுண்டு வெடித்ததில், மதுரை வாடிப்பட்டியை சேர்ந்த மருதபாண்டி, திருநெல்வேலி புளியங்குடியை சேர்ந்த விக்னேஸ்குமார், சென்னை புதுப்பேட்டையை சேர்ந்த ராமச்சந்திரன் ஆகிய மூன்று போலீசார் காயம் அடைந்தனர். இதுகுறித்த தகவல் அறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்த போலீசாரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், நாட்டு வெடிகுண்டு வீசிய கும்பலை அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சி உதவியுடன் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்