Rock Fort Times
Online News

சத்துணவு ஊழியர்கள், கிராம ஊராட்சி செயலாளர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…!

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை ஆற்றினார். அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியால் மாநிலம் சந்தித்த பின்னடைவு, ஓரவஞ்சனையுடன் செயல்படும் மத்திய அரசு என்ற இடியாப்ப சிக்கல் போன்ற சூழலில்தான் 6வது முறையாக ஆட்சிக்கு வந்தோம். தற்போது 5 ஆண்டு கால ஆட்சியில் நான் மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன். மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதுதான் இதற்கு காரணம். என்னுடைய இலக்குகளை நான் வென்றுவிட்டேன். திராவிட மாடல் அரசின் சாதனையால் தமிழ்நாடு தலைநிமிர்ந்துவிட்டது. “பேரறிஞர் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா எதிர்கொள்ளாத நெருக்கடிகளை தற்போது எதிர்கொள்கிறோம். அவர்கள் காலத்தில் இருந்த ஆளுநர்கள் இப்படி இல்லை. முரண்பாடுகள் இதயத்தில் இருந்தாலும் அதை ரணமாக்கும் வகையில் செயல்பட்டதில்லை. தமிழ்நாட்டின் வளர்ச்சியை பிற மாநிலங்கள் தலை உயர்த்தி பார்க்கின்றன. என்னுடைய முதல் கையெழுத்தே மகளிர் விடியல் பயண திட்டம்தான். விடியல் பயணம் மூலம் ஒவ்வொரு மகளிரும் ரூ.60,000 வரை சேமித்துள்ளனர். மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் ஒவ்வொரு மகளிருக்கும் ரூ.29,000 வழங்கி உள்ளோம். காலை உணவு திட்டம் மூலம் பள்ளி குழந்தைகள் சத்தான உணவை உண்டு வருகின்றனர். அரசு ஊழியர்களின் 23 ஆண்டு கால கோரிக்கைக்கு தீர்வு காணும் வகையில் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ளோம். எங்கள் சாதனைகளை நாங்களே மிஞ்சும் அளவுக்கு திராவிட மாடல் 2.0 ஆட்சி இருக்கும். சாதனைக்கு மேல் சாதனை படைப்பதுதான் திராவிட மாடல் அரசு. முதலமைச்சராக பொறுப்பேற்று 1,724 நாட்களில் 8,655 நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன். சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கு, கிராம ஊராட்சி செயலர்களுக்கான ஓய்வூதியம் 2 ஆயிரத்தில் இருந்து 3,400 ஆக உயர்த்தி வழங்கப்படும். பணி நிறைவின்போது வழங்கப்படும் ஒட்டுமொத்த தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து 2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புகளை வெளியிட்டார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்