திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் “கவுன்ட்டவுன்” தொடங்கிவிட்டது …* மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு…
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் குறுகிய காலமே இருப்பதால் அரசியல் களம் சூடு பிடித்து உள்ளது. இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரச்சார முதல் பொதுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் இன்று(23-01-2026) நடைபெற்றது. கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கூட்டணி கட்சித் தலைவர்கள் டிடிவி தினகரன், அன்புமணி, ஜி.கே.வாசன், பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம், ஜான் பாண்டியன், மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன், அண்ணாமலை மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த ஏராளமான தொண்டர்களும், பொதுமக்களும் பங்கேற்றனர். கூட்டத்தில், நயினார் நாகேந்திரன், எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், அன்புமணி உள்ளிட்ட பலர் பேசினர்.
இறுதியாக பாரத பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-
பாரதா மாதா வாழ்க..என் சகோதர சகோதரிகளே.. வணக்கம். 2026-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் என் முதல் பயணமாக ஏரி காத்த ராமர் பூமியான மதுராந்தகம் வந்துள்ளேன்.இன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள். நேதாஜியோடு சுதந்திர போராட்டத்தில் பல தமிழர்கள் பங்கேற்றனர். வீரம், நாட்டுப்பற்று தமிழக மக்களின் நாடி, நரம்புகளில் நிறைந்துள்ளது. தமிழ்நாடு மாற்றத்திற்கு தயாராகி விட்டது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சி மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். தமிழ்நாட்டை ஊழலற்ற, பாதுகாப்பான மாநிலமாக மாற்ற வேண்டும். திமுக என்றால் CMC. அதாவது கரப்ஷன், மாபியா, கிரிமினல். திமுகவின் மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது. திமுக ஆட்சியை வீட்டுக்கு விரட்டி அடிக்கும் கவுன்ட்டவுன் தொடங்கி உள்ளது. திமுக அரசை கிள்ளி எறிய வேண்டும் என மக்கள் முடிவெடுத்துள்ளனர்.தமிழ்நாட்டிற்கு இரட்டை என்ஜின் அரசு வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். திமுக அரசு ஒரே ஒரு குடும்பத்திற்காக மட்டுமே இயங்கி வருகிறது. இங்கு ஜனநாயகம் இல்லை,. தமிழ்நாட்டு மக்களுக்கு திமுக அரசு துரோகம் இழைத்துவிட்டது. ஊழல் மலிந்துள்ளது குழந்தைக்கும் தெரியும். இந்தியாவை வளம் பொருந்தியதாக மாற்றியது தமிழக பாரம்பரியம். தமிழ்நாட்டின் கலாசாரம், ஆன்மீகம் இந்தியாவின் பெருமை. திமுகவினர் கட்சியில் வளர ஒரு குடும்பத்திற்கு ஆமாம் சாமி போட வேண்டும். பாஜகவின் கடந்த 11 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு மும்மடங்கு அதிக நிதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு ரூ.3 லட்சம் கோடி கொடுத்துள்ளது மத்திய அரசு. வளர்ச்சி திட்டங்களுக்கு 11 லட்சம் கோடி வழங்கி உள்ளது. காங்கிரஸ் அரசை விட 7 மடங்கு ரெயில்வே திட்டங்களுக்கு அதிக நிதி வழங்கி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.