Rock Fort Times
Online News

2026 சட்டமன்றத் தேர்தல் தான் திமுகவுக்கு கடைசி தேர்தலாக இருக்கும்…* மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி..!

தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரச்சார முதல் பொதுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் இன்று(23-01-2026) நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கூட்டணி கட்சித் தலைவர்கள் டிடிவி தினகரன், அன்புமணி, ஜி.கே.வாசன், பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம், ஜான் பாண்டியன், மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், எல்.முருகன் மற்றும் அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், கடந்த நாலேமுக்கால் ஆண்டுகளில் திமுக ஆட்சியில் மக்களுக்கு வேதனை தான் மிஞ்சி இருக்கிறது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை நடந்து கொண்டு இருக்கிறது. ஊழல் செய்யாத துறைகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு எங்கும் ஊழல், எதிலும் ஊழலாக இருக்கிறது. ஒரு குடும்பம் வாழ 8 கோடி மக்களை வாட்டி வதைக்கிறார்கள். கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே கட்சியிலும், ஆட்சியிலும் அதிகாரம். உதயநிதி ஸ்டாலினை ஆரம்பத்தில் எம்எல்ஏ ஆக்கினார் முதல்வர் ஸ்டாலின், அதன்பிறகு அமைச்சர் ஆக்கினார். தற்போது துணை முதல்வராக்கி உள்ளார். திமுகவில் காலம் காலமாக உழைத்தவர்களுக்கு இவ்வாறு பதவியும் அதிகாரமும், வழங்கப்பட்டு இருக்கிறதா? . பிரதமர் மதுராந்தகம் வந்ததும் சூரியன் மறைந்து விட்டது. எனது ஆட்சியில் மத்திய அரசு கொண்டு வந்த பல திட்டங்களை முதல்வர் நிறுத்தி வைத்துள்ளார். இந்தத் தேர்தல் தான் திமுகவிற்கு இறுதித் தேர்தல். வருகிற சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக டிடிவி தினகரன் பேசுகையில், எங்களுக்கு இடையே மனக்கசப்புகள் இருந்தது உண்மைதான். அதையெல்லாம் மறந்து ஒரு குடும்ப ஆட்சியை அகற்ற ஒன்றிணைந்துள்ளோம் என்று பேசினார். அன்புமணி பேசுகையில், தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது. சுமார் 6 லட்சம் கோடிக்கு ஊழல் நடந்துள்ளது. திமுக அனைத்து துறைகளிலும் ‘பெயில்’ ஆகிவிட்டது என்று கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்