இந்தியாவின் 77-வது குடியரசு தினவிழா நாடு முழுவதும் ஜனவரி 26ம் தேதி உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் டெல்லி கடமைப்பாதையில் தீவிரமாக நடந்து வருகிறது. பார்வையாளர்கள் அமருவதற்கான கேலரிகள் ஏற்கனவே அமைக்கப்பட்டு விட்டன. தற்போது அங்கு தினமும் ஒத்திகை நடந்து வருகிறது. இதில் முழு ஒத்திகை இன்று (ஜன.23) நடைபெறுகிறது. இந்த ஆண்டு டெல்லி குடியரசு தினவிழா அணிவகுப்பு அலங்கார வாகன ஊர்வலத்தில் தமிழ்நாடு அரசின் ஊர்தியும் இடம்பெறுகிறது. இதுதவிர பல்வேறு சிறப்பு அம்சங்களும் இந்த ஆண்டு விழாவில் இடம்பெறுகின்றன. குறிப்பாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை இதில் காட்சிப்படுத்தப்படுகிறது. இதுபோல வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டுவிழாவை குறிக்கும் நிகழ்வுகளும் இடம்பெறுகிறது. மேலும் ஒரு சிறப்பு அம்சமாக ரோபோ நாய்கள் (மியூல்) படைப்பிரிவும் இந்த ஆண்டு இடம்பெறுகிறது. இந்திய ராணுவம் சமீபத்தில் 100 ரோபோ நாய்களை ஆயுதப்படையில் சேர்த்துள்ளது. இந்த ரோபோக்களில் துப்பாக்கியும் பொருத்தப்பட்டு உள்ளது. படிகள் மற்றும் மலைப்பகுதிகளில் ஏறவும், தடைகளை கடக்கவும் இவை வடிவமைக்கப்பட்டு உள்ளன. இவற்றை மைனஸ் 55 டிகிரி குளிரிலும் ரிமோட் மூலம் இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சம் 15 கிலோ எடையை இது சுமந்து செல்லும். இவை, கடமைப்பாதை அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. முன்னதாக கொல்கத்தாவில் நடைபெற்ற அணிவகுப்பு ஒத்திகையிலும் ஈடுபடுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.