Rock Fort Times
Online News

ஒரத்தநாடு எம்.எல்.ஏ. வைத்திலிங்கம் ராஜினாமா: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்…!

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார். அதிமுகவில் ஓபிஎஸ் ஆதரவாளராக செயல்பட்டு வந்த வைத்திலிங்கம், தனது எம்எல்ஏ பதவியை இன்று( ஜன. 21) ராஜினாமா செய்தார். சட்டப்பேரவை தலைவர் அப்பாவுவிடம் தனது ராஜினாமா கடிதத்தை அவர் நேரில் வழங்கினார். அதிமுகவில் ஓபிஎஸ் உள்ளிட்டோரை கட்சியில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்திருந்த நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மாற்றுகட்சிகளில் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். அந்த வகையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஓபிஎஸ் ஆதரவு சட்டமன்ற உறுப்பினரான மனோஜ் பாண்டியன், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்தார். அதேபோல், அண்மையில் ஓபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளராக இருந்த வழக்கறிஞர் சுப்புரத்தினம், திமுகவில் இணைந்தார். இந்நிலையில், ஓபிஎஸ்ஸின் முக்கிய தளபதிகளில் ஒருவராக விளங்கிய வைத்திலிங்கம், தனது எம்எல்ஏ பதவியை இன்று காலை ராஜினாமா செய்தார். பின்னர், தலைமைச் செயலகத்தில் இருந்து அண்ணா அறிவாலயம் சென்ற அவர், முதலமைச்சர் முக ஸ்டாலினை சந்தித்து அவர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்த நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் கே.என்.நேரு, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் திமுக தலைமை கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் செல்வாக்கு பெற்றவரான வைத்திலிங்கம், திமுகவில் இணைந்துள்ள நிலையில், அது வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு சாதகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்