தமிழக பள்ளிகளில் காலநிலைக் கல்வி திட்டம்… அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தனர்!
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரூ.24 கோடியில் ‘காலநிலை கல்வி திட்டம்’ செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் அறிவித்து இருந்தார். அதற்கான திட்டத்தை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் இன்று (19.01.2026) சென்னை, தலைமைச் செயலகத்தில் அரசு பள்ளிகளில் துவக்கி வைத்தார்கள். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு போன்ற நீண்ட நெடிய கடற்கரையினைக் கொண்ட மாநிலத்தில் காலநிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் வழக்கமாகி வருகின்ற சூழலில், இச்சவால்களை எதிர்கொள்ளத் தேவையான விழிப்புணர்வு மற்றும் கல்வியறிவினை அனைவருக்கும் ஏற்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தினை உணர்ந்து, காலநிலைக் கல்வியறிவு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இம்முன்னெடுப்பின் கீழ் மாணவர்களுக்கு கோடைகால மற்றும் குளிர்கால இயற்கை முகாம்கள், காலநிலை மாற்றம் குறித்து பள்ளி ஆசிரியர்களுக்கான உறைவிடப் பயிற்சி முகாம்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு சூழல் அறிவோம் எனும் தலைப்பிலான விநாடி வினா ஆகியவை பள்ளிக்கல்வித் துறையுடன் இணைந்து சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையால் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, “சூழல் 2.0” விநாடி வினாவின் இறுதிப் போட்டி கடந்த 06.01.2026 அன்று நடைபெற்ற நிலையில், இன்று, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சுற்றுச்ச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை கூட்ட அரங்கில், “காலநிலைக் கல்வி” மற்றும் குளுமைப் பள்ளிகள் முன்னெடுப்புகளின் துவக்கவிழா நடைபெற்றது. அப்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,காலநிலைக் கல்வியறிவு பாடத்தொகுதிகளை வெளியிட்டு, திட்டத்தினைத் துவக்கி வைத்தார். அமைச்சர் தங்கம் தென்னரசு, ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தினால் (UNEP) உருவாக்கப்பட்ட பசுமையான எதிர்காலத்திற்கு குளுமையான வகுப்பறைகள் மற்றும் பசுமைப் பள்ளிகளில் அமைவான குளிரூட்ட உத்திகளை ஒருங்கிணைத்தல் ஆகிய புத்தகங்களை வெளியிட்டார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.