பொதுமக்களின் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி: திருச்சி, சண்முகா நகரில் பூங்கா அமைக்கும் பணி தொடக்கம்…!
திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வயலூர் ரோடு, உய்யகொண்டான் திருமலை, சண்முகா நகர் பகுதியில் அப்பகுதி மக்களின் வசதிக்காக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த 2023ம் ஆண்டு பூங்கா அமைப்பதற்கு ரூ.48.85 லட்சம் திட்ட மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், அடிக்கல் நாட்டப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும் அந்த பகுதியில் பூங்கா அமைப்பதற்கான பணிகள் எதுவும் தொடங்கப்படாமல் இருந்தது. அந்த இடத்தை அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் அபகரிக்க முயற்சிப்பதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதோடு பூங்கா பணிகளை விரைவில் தொடங்குமாறு மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் முறையிட்டும் பலன் இல்லை. அதனைத்தொடர்ந்து அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் பூங்கா அமைக்கக்கோரி டிசம்பர் மாதம் 11ம் தேதி புத்தூர் நால்ரோடு அருகே சண்முகா நகர் நலச்சங்க சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் முத்துமாரி தலைமையில் அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இதுதொடர்பாக நீதிமன்றத்தில் தனிநபர் தொடுத்த வழக்கில் பூங்கா அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் மாநகராட்சி நிர்வாகத்துக்கு சொந்தமானது என தீர்ப்பளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஜனவரி 5-ம் தேதி அந்தப் பகுதி குடியிருப்பு வாசிகள் மாவட்ட ஆட்சியரை மீண்டும் சந்தித்து கோரிக்கை விடுத்தனர். அவரது உத்தரவின் பேரில், பூங்கா அமைக்கும் பணி அண்மையில் தொடங்கியது. பூங்கா அமைக்கப்பட உள்ள இடத்தில் மண்டியுள்ள புதர், முள் செடிகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி சமன்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு வரவேற்பு தெரிவித்த சண்முகா நகர் நல சங்கத்தினர், அமைச்சர் கே.என்.நேரு மற்றும் மாவட்ட கலெக்டர், மாநகராட்சி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். மேலும், பூங்கா பணிகளை விரைவாக முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினர்.

Comments are closed.