பழைய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு இப்போது இபிஎஸ் நீலிக்கண்ணீர் வடிப்பது ஏன்?* அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி!
2003-ம் ஆண்டில் ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து அரசு ஊழியர்களின் எதிர்காலத்தையே நிர்மூலமாக்கிய அதிமுக இப்போது ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கிறது? என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், சேலத்தில் செய்தியாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தபோது, “மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு் திரும்புவது பற்றி சூழ்நிலையைப் பொறுத்து முடிவு எடுக்கப்படும்’’ என்று சொல்லியிருக்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்கு 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி அரசு ஊழியர்களை மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறார். ஆட்சியில் இருந்த போது பழைய ஓய்வூதியத் திட்ட வாக்குறுதியை நிறைவேற்றாத பழனிசாமி ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவதாகச் சொல்வது “அறுக்கமாட்டாதவன் இடுப்பில் 58 அரிவாளாம்” என்ற பழமொழியைத்தான் நினைவுக்கு கொண்டு வருகிறது. 2016 சட்டப்பேரவை தேர்தலுக்காக அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி எண் 46-ல் பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு ஊழியர்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டது. அந்த வாக்குறுதியை 5 ஆண்டுகாலமாக ஏன் நிறைவேற்ற வில்லை?. 4 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த போது பழனிசாமி அந்தப் பழைய ஓய்வூதியத் திட்ட வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கலாமே! ஏன் செய்யவில்லை? இப்போது திமுக அரசு அறிவித்ததும் பொங்கி எழுவது ஏன்?.ஆட்சியில் இருந்த போது 2003-ம் ஆண்டில் ஓய்வூதியத் திட்டத்தையே ரத்து செய்து அரசு ஊழியர்களின் எதிர்காலத்தையே நிர்மூலமாக்கிய அதிமுக இப்போது ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கிறது? அரசு ஊழியர்களை கொச்சைப்படுத்துவதையே வாடிக்கையாக வைத்திருக்கும் பழனிசாமி ஏன் பதறுகிறார்?” எனத் தெரிவித்துள்ளார்.

Comments are closed.