கோவிலுக்கு காணிக்கையாக வரப்பெற்ற நகைகள், லட்சக்கணக்கான பணம் மாயம்:* நடவடிக்கை கோரி திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு!
திருச்சி மாவட்டம், மால்வாய் கிராமத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான அய்யனார் ஸ்ரீபூமிபாலகன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான சுமார் 500 சவரன் ஆபரண தங்கம் மற்றும் ஒருகோடி ரூபாய்க்கு மேலான உண்டியல் காணிக்கை, கோவில் திருப்பணிக்கு நன்கொடையாக வசூல் செய்யப்பட்ட சுமார் ஒருகோடி ரூபாய் ஆகியவற்றை ஆலய பரம்பரை அறங்காவலரும், கோவில் பூசாரி மற்றும் அவரது உறவினர்கள் இணைந்து முறைகேடு செய்திருப்பதாகவும், அதற்கு கோவில் அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாக கூறி கிராம மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி குறை தீர்க்கும் நாளான இன்று(19-01-2026) திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கிராம மக்கள் திரண்டு வந்தனர். அப்போது அங்கு காவல் பணியில் ஈடுபட்ட போலீசார், மொத்தமாக அனைவரையும் உள்ளே அனுமதிக்க முடியாது. முக்கியஸ்தர்கள் மட்டும் உள்ளே செல்லுமாறு அறிவுறுத்தினர். அதன்பேரில் கிராம முக்கியஸ்தர்கள் மட்டும் உள்ளே சென்று கலெக்டரிடம் மனு அளித்தனர். ஒருசேர கிராம மக்கள் திரண்டு வந்ததால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Comments are closed.