Rock Fort Times
Online News

பொங்கட்டும் மகிழ்ச்சி; வெல்லட்டும் தமிழ்நாடு… * முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தைப் பொங்கல் வாழ்த்து…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்கள் அனைவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தைப் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும், வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு வெற்றி பொங்கலாக அமையட்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்து மடல். தை முதல்நாள் தமிழர் வாழ்வில் சிறப்புமிக்க நாள். இல்லங்களிலும், உள்ளங்களிலும் இன்பம் பொங்கிடும் பொங்கல் விழா தொடங்குகிற நன்னாள். உழைப்பைப் போற்றுகின்ற திருநாள். தமிழ்ப் பண்பாட்டை உலகம் அறிந்திடும் வகையில் மகிழ்ச்சியான கலை, பண்பாட்டு நிகழ்வுகளும் பாரம்பரியமிக்க விளையாட்டுப் போட்டிகளுமாக கொண்டாடப்படுகிற நாள். அந்த மகிழ்ச்சி இந்த ஆண்டில், இன்னும் கூடுதலாக இருப்பதை தமிழ்நாடு முழுவதும் காண முடிகிறது. இயற்கை சீற்றங்கள் ஏற்பட்ட போதும், விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் துணையாகவும் அரணாகவும் நின்றது உங்களில் ஒருவனான என் தலைமையிலான திராவிட மாடல் அரசு. பொங்கல் திருநாள் என்பது தமிழர்கள் அனைவருக்குமான திருவிழா. அதில் சாதி பேதம் கிடையாது. மத வேறுபாடுகள் கிடையாது. ஏழை – பணக்காரர் என்ற ஏற்றத்தாழ்வு கிடையாது. பெண் – ஆண் என்ற பாகுபாடு கிடையாது. எல்லாருக்குமான திருநாள் பொங்கல். எல்லாருக்குமான அரசு, திராவிட மாடல். ஐந்து ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் தமிழ்நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களிடமும் சென்று சேர்ந்து, அவர்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பதுடன், ஒட்டுமொத்த மாநிலத்தின் வளர்ச்சியையும் உறுதி செய்துள்ளது. நிரந்தரத் தடைகளை ஏற்படுத்த முயலும் சக்திகளைக் கடந்து, நிரந்தர மகிழ்ச்சியை மக்களுக்குத் தருவதுதான் திராவிட மாடல் அரசின் உன்னத நோக்கமாகும். 1 கோடியே 30 இலட்சம் குடும்பத் தலைவியருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் வாயிலாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வரும் திராவிட மாடல் அரசு, தமிழ்நாட்டில் உள்ள ஏறத்தாழ 2 கோடியே 23 இலட்சம் அரிசி அட்டைதாரர்களுக்கு மூவாயிரம் ரூபாய் ரொக்கத்துடனான பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கியுள்ளது. தமிழர் திருநாளில், தமிழர்களின் வீடுகள்தோறும் மகிழ்ச்சி பொங்குகிற வகையில் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள இந்தப் பொங்கல் தொகுப்பைப் பெற்றுச் செல்லும் தாய்மார்களின் மலர்ந்த முகமும் அவர்களின் உள்ளத்திலிருந்து வெளிப்படும் நல்வாழ்த்துகளும்தான் திராவிட மாடல் ஆட்சிக்கான நற்சான்று. தை முதல் நாளில், தமிழர்களின் இல்லங்கள்தோறும் மகிழ்ச்சி பொங்கட்டும். அந்த மகிழ்ச்சி நம் அனைவருக்கும் ஊக்கத்தையும், உத்வேகத்தையும் வழங்கட்டும். சூரியனைப் போற்றும் பொங்கல் நன்னாள், உடன்பிறப்புகளின் உழைப்பினால் கழகத்திற்கு வெற்றிப் பொங்கலாக அமையட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும். கழக உடன்பிறப்புகளுக்கும், தமிழர்கள் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் – தைப்பொங்கல் வாழ்த்துகள்!” இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்