சென்னையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஆனந்த்குமார். இவர், “மேட்டூர் சூப்பர் சர்வீஸ்” என்ற பஸ் டிராவல்ஸ் கம்பெனியை சொந்தமாக வைத்து நடத்தி வருகிறார். தன்னுடைய பிசினஸை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், சேலத்தைச் சேர்ந்த பாலு என்பவர் மூலமாக, சென்னையில் வசித்து வரும், தென்காசி – நெல்லை மாவட்டம் மேல இலந்தைக்குளம் கிராமத்தை சேர்ந்த ஹரி கோபாலகிருஷ்ணன் என்கிற ஹரி நாடாரை அணுகியுள்ளார். ஹரி நாடார், ரூ.30 கோடி முதல் ரூ.35 கோடி வரை கடன் வாங்கித் தருவதாகவும், அதற்காக தனக்கு ரூ.77 லட்சம் கமிஷன் தர வேண்டும் என்றும் கேட்டுள்ளார். அதனை ஏற்றுக் கொண்ட தொழிலதிபர் ஆனந்த்குமார், ரூ.70 லட்சத்தை வங்கி மூலமாகவும், ரூ.7 லட்சத்தை ரொக்கமாகவும் ஹரி நாடாரிடம் கொடுத்துள்ளார். கமிஷன் பணத்தைப் பெற்றுக் கொண்ட ஹரி நாடாரும், பாலுவும், ரூ.30 கோடிக்கு போலியான 4 டிமாண்ட் டிராஃப்ட்களை ஆனந்த்குமாரிடம் கொடுத்துள்ளனர். அவற்றை வங்கியில் செலுத்தியபோது, அவை அனைத்தும் போலியானவை எனத் தெரியவந்தது. இதுகுறித்து, ஹரி நாடார் மற்றும் பாலுவிடம் கேட்டபோது, அவர்கள் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆனந்த்குமார், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதன்படி அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், ஹரி நாடாரை தேடி வந்தனர். இந்நிலையில் சென்னையில் இருந்து காரில் திருச்சிக்கு சென்று கொண்டிருந்த ஹரி நாடாரை, திருச்சி பைபாஸ் சாலையில் போலீசார் மடக்கி அவரை கைது செய்தனர். அப்போது அவரது காரை சோதனையிட்டபோது ரூ.12.50 லட்சம் வரை ரொக்கம், 7 செல்போன்கள் ஆகியவை இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அதேபோல சேலத்தில் பாலுவையும் போலீசார் கைது செய்தனர்.

Comments are closed.