மத்திய பிரதேச மாநிலம், பன்னா மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் காதிக் (24) என்பவர் அங்கு இறைச்சி கடை நடத்தி வருகிறார். அவரது நண்பர் சஜித் முகமது (23) பழக்கடை நடத்தி வருகிறார். இருவரும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பன்னா மாவட்டத்தில் வறுமை, தண்ணீர் பற்றாக்குறை, வேலையின்மை போன்ற பிரச்சனைகளை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். இருப்பினும், இப்பகுதியில் வைர சுரங்கங்கள் அதிகமாக உள்ளன. உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பும் அதிர்ஷ்ட வாய்ப்பும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், மாநில அரசு 3 மாதங்களுக்கு ஒருமுறை சிறிய நிலப்பகுதிகளை வைரம் தேட குத்தகைக்கு வழங்கி வருகிறது. இதன்மூலம் பலர் வைரம் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அனைவருக்கும் வெற்றி கிடைப்பதில்லை. ஒரு சிலருக்கே அதிர்ஷ்டம் கைகூடும். அந்த வகையில், சதீஷ் காதிக் மற்றும் சஜித் முகமது ஆகியோர் ஒரு நிலப்பகுதியை குத்தகைக்கு எடுத்தனர். தங்களது தினசரி வேலை முடிந்த பிறகு, கிடைக்கும் நேரங்களில் வைரம் தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். சம்பவத்தன்று காலை, மண்ணை தோண்டியபோது வெள்ளை நிறத்தில் மின்னிய ஒரு கல் அவர்களின் கவனத்தை ஈர்த்தது. அந்த கல்லை வைர மதிப்பீட்டாளர் அனுபாம் சிங்கிடம் கொண்டு சென்று பரிசோதனை செய்தபோது, அது 15.34 காரட் எடையுள்ள உயர்தர வைரம் என உறுதி செய்யப்பட்டது. அதன் மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இருவரும் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்றனர். இந்த வைரம் விரைவில் ஏலத்திற்கு விடப்பட உள்ளது. இந்திய நிறுவனங்கள் மட்டுமின்றி வெளிநாட்டு நிறுவனங்களும் இதில் பங்கேற்க உள்ளன. ஏலத்தில் கிடைக்கும் தொகை இருவருக்கும் வழங்கப்படும். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “இப்போது எங்கள் மகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை. இந்த பணத்தை சகோதரிகளின் திருமணத்திற்காக பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்” என்றனர். பல தலைமுறைகளாக வைரம் தேடிய குடும்பத்தினருக்கு கிடைக்காத அதிர்ஷ்டம், இப்போது இளம் தலைமுறைக்கு கிடைத்துள்ளது என்பதே இந்த சம்பவத்தின் சிறப்பாகும்.

Comments are closed.