பீகாரைத் தொடர்ந்து, வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) தமிழ்நாடு உட்பட 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது, தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் இந்த திருத்தப் பணிகளுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பூர்த்தி செய்யப்பட்ட வாக்காளர் விண்ணப்பங்களை டிசம்பர் 14 வரை சமர்ப்பிக்கலாம் என்றும், வரைவு வாக்காளர் பட்டியல் டிச.19 அன்று வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்ததாவது., எந்த தகுதியான வாக்காளரும் பட்டியலில் இருந்து தவற விடப்படாமல் இருக்கவே இந்த நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்கீழ், BLOக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் BLAs இணைந்து, முகவரியற்றவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், இறந்தவர் அல்லது இரட்டை பதிவு செய்யப்பட்டவர்கள் போன்ற ASD வாக்காளர்களின் பட்டியலை சரிபார்க்கும் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் 68,467 BLOக்கள் வாக்குச்சாவடி வாரியாக இச்சரிபார்ப்பு பணிகளை மேற்கொள்கின்றனர். வாக்குச்சாவடிகள் மறுசீரமைக்கப்பட்டதால் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 1,200 வாக்காளர்கள் என்ற வரம்பு அமல்படுத்தப்பட்டு, மொத்த வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 75,035 ஆக உயர்ந்துள்ளது. புதிய வாக்காளர்கள் படிவம்–6 மற்றும் உறுதி மொழி படிவத்தை BLOக்களுக்கு வழங்கிவோ அல்லது ECINet செயலி/இணையதளம் மூலம் ஆன்லைனிலோ விண்ணப்பிக்கலாம். வரைவு பட்டியலுக்கான ஏற்புரைகள்–மறுப்புரைகள் 19.12.2025 முதல் 18.01.2026 வரை ஏற்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் 17.02.2026 அன்று வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.