Rock Fort Times
Online News

தவெகவில் இணைந்தார், நாஞ்சில் சம்பத்…!

தி.மு.க.வில் சிறந்த பேச்சாளராக விளங்கிய நாஞ்சில் சம்பத், வைகோ திமுகவை விட்டு வெளியேற்றப்பட்டபோது, தானும் வெளியேறினார். வைகோ புதிதாக தொடங்கிய மதி.மு.க.வில் அவருக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சிறந்த பேச்சாளரான இவர் வைகோவுக்கு இணையாக பேச்சாற்றல் பெற்றவராக இருந்தார். ஆனால், வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருக்கு அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. மேலும், தமிழகம் முழுவதும் வலம் வர இன்னோவா கார் ஒன்றும் கொடுக்கப்பட்டது. ஆனால், 2016-ம் ஆண்டு ஜனவரி 2-ந் தேதி அந்தப் பதவியில் இருந்து திடீரென நீக்கப்பட்டார். அதன்பிறகு, டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட அவர், அங்கிருந்தும் வெளியேறினார். பிறகு அரசியலைவிட்டு விலகுவதாகவும் நாஞ்சில் சம்பத் கூறினார். இந்த நிலையில், ம.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா தொடங்கிய புதிய கட்சி நிகழ்வில் அவர் பங்கேற்றார். இந்த நிலையில், தற்போது நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். விஜய்யை இன்று(05-12-2025) கட்சி அலுவலகத்தில் சந்தித்த நாஞ்சில் சம்பத், அவரது முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்