இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்ரிக்கா அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி கவுகாத்தியில் நடைபெற்றது. இதன், முதல் இன்னிங்ஸில் தென்னாப்ரிக்கா 489 ரன்கள் குவித்த நிலையில், இந்தியா 201 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் 260 ரன்களை சேர்த்து டிக்ளேர் செய்த தென்னாப்ரிக்கா, இந்தியாவிற்கு 549 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி நான்காவது நாள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 27 ரன் எடுத்திருந்தது. கடைசி நாளான இன்று(26-11-2025) 8 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில், வெற்றி பெற 522 ரன்கள் தேவை என்ற நிலையில் இந்தியா களம் இறங்கியது. ஆனால், இந்திய வீரர்களின் விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன. 140 ரன்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 54 ரன்கள் எடுத்தார். 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன்மூலம் சொந்த மண்ணில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் டெஸ்ட் போட்டியில் தோல்வி என்ற மோசமான சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. தொடரை இழந்ததன் மூலம் இந்திய அணி 5வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. பயிற்சியாளர் கௌதம் காம்பீர் தலைமை குறித்து கேள்வியும், விமர்சனமும் எழுந்துள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணியுடனான தொடரை மட்டுமே இந்திய அணி கைப்பற்றியது. அதேசமயம் இந்திய அணி வீரர்களும் சொந்த மண்ணில் கூட சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வருவது கடும் கோபத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed.