சாலைகளிலும், விளை நிலங்களிலும் தூக்கி வீசப்படுவதை தடுக்க நடவடிக்கை: திருச்சியிலும் காலி மதுபான பாட்டிலுக்கு 10 ரூபாய் கிடைக்கும்!
திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் வே.சரவணன் விடுத்துள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது; திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள மதுபான சில்லறை விற்பனை கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களை விளைநிலங்கள், பொது இடங்கள் மற்றும் சாலைகளில் காலியாக விட்டுச்செல்வதை தடுக்கும் பொருட்டு வாடிக்கையாளர்கள் வாங்கி சென்று அருந்தியபின் காலி மதுபான பாட்டில்களை அதே சில்லறை விற்பனை கடைகளில் திரும்ப பெற்றுக் கொள்ளும் திட்டம் சென்னை உயர்நீதி மன்ற ஆணையின்படி, திருச்சியில் நாளை (25.11.2025) முதல் அமலுக்கு வருகிறது. இந்த நடைமுறை ஏற்கனவே திருவாரூர், நாகப்பட்டினம், தேனி, கன்னியாகுமரி, தர்மபுரி, தஞ்சாவூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நடைமுறையில் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபான பாட்டில்களை அடையாளம் காணும் வகையில் மதுபாட்டில்கள் மீது கடை எண். குறிப்பிட்டு ரூ.10/- என அச்சிடப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும். அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு மதுபாட்டில்களையும் விற்பனை செய்யும்போது அதிகபட்ச சில்லறை விற்பனை விலையுடன் சேர்த்து கூடுதலாக ரூ.10/- வாடிக்கையாளரிடம் இருந்து பெறப்படும். அவ்வாறு வாடிக்கையாளர்கள் மதுபான கடைகளிலிருந்து வாங்கும் மதுபாட்டில்களை அதில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கரோடு அதே மதுபான கடையில் காலியாக திரும்ப ஒப்படைக்கும்போது ஏற்கனவே பெறப்பட்ட ரூ.10 திரும்ப வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.