வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வரும் பயணிகள் சிலர் தங்கம், வெளிநாட்டு பணம், அரிய வகை உயிரினங்கள், போதைப்பொருட்கள் உள்ளிட்டவைகளை கடத்தி வருவதும், அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. இந்த கடத்தலை தடுப்பதற்கு சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சிங்கப்பூரிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு இன்று (நவ.24) பயணிகள் விமானம் ஒன்று வந்தடைந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணி கொண்டு வந்த உடைமையில், உயிருடன் 2800 ஆமை குஞ்சுகள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரிகள், வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் வனத்துறையினர், அந்த ஆமை குஞ்சுகளை பெற்று சென்றனர். அதனை கடத்தி வந்த பயணியிடம், இந்த ஆமைக்குஞ்சுகளை எதற்காக கடத்தி வந்தார்?, யாரிடம் கொண்டு சேர்க்க கடத்தி வந்தார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வெளிநாடுகளில் இந்த வகையான ஆமை வளர்ப்பு அதிர்ஷ்டமாக பார்க்கப்படுகிறது. இதனால், அந்த பயணி கடத்தி வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், இந்திய வன உயிரியல் சட்டத்தின்படி, மற்ற நாடுகளின் உயிரினங்களை இந்தியா கொண்டு வருவது குற்றம். எனவே, அந்த ஆமைகளை மீண்டும் சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Comments are closed.