தமிழகத்தில் இயங்கி வருகிற அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 2011ம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்து தற்போது வரை பணியாற்றி வரும் ஆசிரியர்கள் தகுதி தேர்வு எழுத வேண்டும் என உச்ச நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து பணியில் உள்ள ஆசிரியர்கள் தங்களது பணியில் தொடர்பவதற்கு ஏதுவாக தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக சென்னை, அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (22.11.2025) சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். அப்போது 2011ம் ஆண்டிற்கு முன்பு பணி நியமனம் பெற்று தற்போது ஆசிரியராக பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது குறித்தும், ஆசிரியர்களிடையே ஏற்பட்டுள்ள அச்ச உணர்வினை போக்கும் வகையில் நேற்று (21.11.2025) தனது தலைமையில் பல்வேறு ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது குறித்தும், அக்கூட்டத்தில் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்த கருத்துகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம், அமைச்சர் தெரிவித்தார். மேலும், இதுகுறித்து எடுக்கவேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை பெற்றார். அதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆசிரியர்களின் நலன் காத்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், திராவிட மாடல் அரசு எந்த சூழ்நிலையிலும் ஆசிரியர்களைக் கைவிடாது என்றும் உறுதியளித்தார். இச்சந்திப்பின்போது, நாடாளுமன்ற உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான பி. வில்சன் உடனிருந்தார்.

Comments are closed.