தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஐ. பெரியசாமியின் மகள் இந்திரா. திண்டுக்கல், ஆரம் காலனி பகுதியில் அமைந்துள்ள இந்திரா வீட்டில் ஜி.எஸ்.டி. நுண்ணறிவு பிரிவினர் சோதனை நடத்தி வருகின்றனர். 4 அதிகாரிகள் இரு கார்களில் வந்து இன்று (21.11.2025) மதியம் 2 மணி முதல் இந்திராவின் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். மத்திய அரசின் கீழ் செயல்படும் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவினர் வரி ஏய்ப்பு மற்றும் வரி மோசடி தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. அமைச்சர் ஐ. பெரியசாமியின் மகள் இந்திராவுக்கு தொடர்புடைய இடங்களில் மத்திய அரசு அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது திமுகவினர் மட்டுமின்றி தமிழக அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக ஐ.பெரியசாமிக்கு தொடர்புடைய இடங்கள், அவரது வீடுகளில் அமலாக்கத்துறையினர் கடந்த ஆகஸ்ட் மாதம் அதிரடி சோதனை நடத்தியிருந்தனர். அதேபோன்று அமைச்சர் ஐ. பெரியசாமியின் மகள் இந்திரா வசித்து வரும் இல்லத்திலும் அமலாக்கத்துறையினர் 5 பேர் சோதனையில் ஈடுபட்டனர். மேலும், அமைச்சர் ஐ. பெரியசாமியின் மகனும், திண்டுக்கல் மாவட்டம், பழனி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினரும், திமுக திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளருமான ஐ.பி.செந்தில்குமார் இல்லத்திலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.